விஜய் ரசிகர்களை வாரிசு திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? ரசிகர்கள் சொன்ன பதில்

இன்றைக்கு தீபாவளி இல்லை, பொங்கல் இன்னும் வரவில்லை, ஆனால் காலண்டரில் எழுதப்படாத ஜனவரி 11 என்ற இந்த நாளை சினிமா ரசிகர்கள் பட்டாசு, வானவேடிக்கை, ஆட்டம், பாட்டம் என்று திருவிழாக்கோலமாக மாற்றியுள்ளனர். அதற்கு காரணம்…

இன்றைக்கு தீபாவளி இல்லை, பொங்கல் இன்னும் வரவில்லை, ஆனால் காலண்டரில் எழுதப்படாத ஜனவரி 11 என்ற இந்த நாளை சினிமா ரசிகர்கள் பட்டாசு, வானவேடிக்கை, ஆட்டம், பாட்டம் என்று திருவிழாக்கோலமாக மாற்றியுள்ளனர். அதற்கு காரணம் விஜய், அஜித் என்ற அசைக்க முடியாத இரு நட்சத்திர ஜாம்பவான்களின் திரைப்படம்தான்.

திரையுலகில் இரு இணை நட்சத்திரங்கள் ஒன்றாக வளம் வருவதும், அவர்கள் இணைந்து பேசப்படுவதும், கொண்டாடப்படுவதும், அவர்களுக்கான ரசிகர்கள் போட்டி போட்டுக்கொள்வதும் ஒன்றும் புதிதில்லை என்றாலும் தமிழ் சினிமாவில் 1940 தொடங்கி இன்று வரை ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்றவாறு இரு இணை நடிகர்கள் ஒன்றாக வலம் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

அப்படி நான்காவது தலைமுறையாக இரு இணை நடிகர்களாக வலம் வருபவர்கள்தான் அஜித்தும், விஜய்யும். 17 ஆண்டுகளுக்கு முன்பாக இருவரும் ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் ஒன்றாக இணைந்து நடித்ததில் ஆரம்பித்து, 1996-ஆம் ஆண்டுக்கு பிறகு அவ்வப்போது இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாவது வரை எல்லா நிகழ்வுகளும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.அந்த வகையில் காலண்டரில் கொண்டாட்ட நாள் என்று எழுதப்படாத நாளான ஜனவரி 11-ஆன இன்று 8 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் – விஜய் இருவரின் படங்களும் ஒரே நாளில் ஒன்றாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் விழாக் கோலத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக வம்சி பைடிபைலி இயக்கத்தில், ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் தளபதி விஜய் நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் தான் வாரிசு. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, ராஷ்மிகா, யோகி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. அப்படிப்பட்ட இப்படத்தில் விஜய் எப்படி இருப்பார் என்பதை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தனர். இத்தைகைய எதிர்பார்ப்பை கொண்டிருந்த விஜய் ரசிகர்களை வாரிசு திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா? படத்தை பார்த்த பிறகு நட்சத்திரங்கள், ரசிகர்களின் கருத்து என்னவாக இருந்தது என பார்க்கலாம்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த வருடம் பொங்கலை முன்னிட்டு வெளிவந்துள்ள வாரிசு திரைப்படம், விஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன் வெளிவந்த படங்களில் தனது ஆக்ஷனை மட்டுமே நம்பி களமிறங்கிய விஜய் நீண்ட இடைவெளிக்கு பிறகு சச்சின், வசீகரா காலத்து துள்ளலுடன் குடும்ப செண்டிமெண்டை முன்னிறுத்தி களமிறங்கியிருக்கிறார் விஜய்.

அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தன்னை நிறுவ போராடிக் கொண்டிருக்கும் விஜய்க்கு இந்த படம் அவரது கரியரில் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இன்று வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக குடும்பங்கள் கொண்டாடும் படமாக வாரிசு வெளிவந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அதில் சிலர் காதலுக்கு மரியாதைக்கு பிறகு ரொம்ப ரொம்ப ரசிச்சி பார்த்த ஃபீல் குட் குடும்பப் படம் என கூறி வருகின்றனர்.

அதோடு தியேட்டர் சிஸ்டம் பழைய மாதிரி இருந்தா இந்த படம் 25 வாரம் ஓடி வெள்ளி விழா கொண்டாடிருக்கும் எனவும். சின்னபசங்க.. வயசுப்பசங்க.. அங்கிள்ஸ்.. தாத்தாஸ்.. சின்ன பொண்ணுங்க.. வயசுப்பொண்ணுங்க.. ஆன்ட்டீஸ். பாட்டீஸ்.. என எந்த வயது பாகுபாடும் இல்லாமல் எல்லா தரப்பினரையும் கவர்ந்து இழுக்கும் படியாக படத்தோட கதை இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் வேறு சிலரோ காலம் காலமாக சினிமாவில் கழுவிக் கழுவி காயப் போட்டுக் கொண்டிருக்கும் கதை. வீட்டுக்கு ஆகாதவன் என்று அப்பாவாலும் சகோதரர்களாலும் நிராகரிக்கப்படும் ஒரு பிள்ளை கடைசியில் தான் மட்டுமே அந்த குடும்பத்தின் வாரிசு என்று நிரூபிக்கும் அரத பழசு கதைக்களம் என விமர்சித்தும் உள்ளனர்.

இந்நிலையில் விஜய்யின் வாரிசு திரைப்படத்தை நடிகை த்ரிஷா, நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் போன்ற திரைப்பிரபலன்கள் பலரும் திரையரங்கிற்கு நேரில் சென்று பார்த்த விட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். இதில் தளபதி 67 படத்தை இயக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாரிசு திரைப்படத்தை பார்க்க இன்று சென்னையில் உள்ள திரையரங்கிற்கு சென்றுள்ளார். படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் படம் எப்படி இருக்கிறது என்றும்..? தளபதி 67 அப்டேட் என்ன என்பதையும் கேட்டனர். அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் ” வாரிசு படம் உண்மையாகவே ரொம்பவே சூப்பராக இருக்கிறது. ரொம்ப நாள் கழித்து பழைய விஜய் சாரை பார்த்தது போல இருந்தது. தளபதி 67 திரைப்படத்தை பற்றி விரைவில் பேசுவோம்” என தெரிவித்துள்ளார்.

இவரைத்தொடர்ந்து நடிகை த்ரிஷா, பிரபல மதுரவாயல் ஏஜிஎஸ் திரையரங்கில் 1 மணிக்கு துணிவு படத்தையும், 4 மணிக்கு வாரிசு படத்தையும் பார்த்துள்ளார். த்ரிஷாவுடன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் உடன் படம் பார்த்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் திரைப்பிரபலன்கள், ரசிகர்களின் வாரிசு திரைப்படம் குறித்த விமர்சனங்களை ட்விட்டர் நிறுவனம் மொத்தமாக தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது . அதில் இயக்குனர் வம்ஷி ஒரு நேர்த்தியான குடும்பப் பொழுதுபோக்கை வழங்கியுள்ளார் என்றே தான் சொல்ல வேண்டும். மேலும், விஜய்யின் மாஸ், ஆக்‌ஷன், எமோஷன், நகைச்சுவை மற்றும் அற்புதமான நடனம் ஆகியவற்றால் நிரம்பி தனது ஆல்ரவுண்ட் நடிப்பால் ரசிகர்களை பெரிதும் குஷி படுத்திருக்கிறார். அதே சமயம், ரசிகர்களை திருப்திப்படுத்த முதல் பாதி ரேசியாகவும், இரண்டாம் பாதிக்கு மேல் சரியான குடும்ப பாசத்தை அமைத்துள்ளார் வம்ஷி. க்ளைமாக்ஸில் விஜய் தனது நடிப்பிற்காக பார்வையாளர்களிடமிருந்து கைதட்டல்களைப் பெற்றார் என்ற கருத்துகளை பகிர்ந்துள்ளது.

 

மொத்தத்தில் விஜய்யின் நடிப்பும், ஸ்டைலும் படத்தில் தீயா இருக்கு என பாசிட்டிவ்வாக சிலர் சொல்ல… அப்போ படம் எப்படி இருக்கு அதை மொதல்ல சொல்லுங்க என கேள்வியை முன் வைக்கிறார்கள் படத்தை பார்த்து சலித்த சிலர். இந்த கேள்விக்கு தமிழில் விஜய் நடிப்பில் வெளி வந்த மகேஷ்பாபு படம் தான் ‘வாரிசு’ என்பதே பதில்.

மேலும், விஜய் படங்கள் வெளியானால் முதல் நாளில் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது விடும். எனவே வாரிசு திரைப்படத்திற்கும் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மட்டும் வாரிசு திரைப்படம் முதல் நாளில் 25 கோடி ரூபாய் அளவுக்கு வசூலிக்கும் என கணிக்கப்பட்டு இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.