“காங்கிரஸின் கதை முடிந்துவிட்டது” என மல்லிகார்ஜுன கார்கே கூறினாரா?

This News Fact Checked by ‘Newschecker’ “காங்கிரஸ் கதை முடிந்துவிட்டது. காங்கிரஸ் இறந்துவிட்டது” என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாக வைரலாகி வரும் வீடியோ முழுமையடையாமல் பகிரப்படுவதும், தவறான மேற்கோளுடன் பகிரப்படுவதும்…

This News Fact Checked by Newschecker

“காங்கிரஸ் கதை முடிந்துவிட்டது. காங்கிரஸ் இறந்துவிட்டது” என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாக வைரலாகி வரும் வீடியோ முழுமையடையாமல் பகிரப்படுவதும், தவறான மேற்கோளுடன் பகிரப்படுவதும் நிரூபணமாகியுள்ளது.

காங்கிரஸ் கதை முடிந்துவிட்டதாக மல்லிகார்ஜுனா கார்கே கூறுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. 17 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில், மல்லிகார்ஜுன கார்கே, “காங்கிரஸ் கதை முடிந்துவிட்டது. காங்கிரஸ் இறந்து விட்டது. காங்கிரஸை இப்போது எங்கும் காணவில்லை” என மல்லிகார்ஜுன கார்கே கூறுவதாக தெரிகிறது.

இந்த வீடியோவை, “கார்கே ஜி நீங்களும் காங்கிரஸில் இருக்கிறீர்கள். காங்கிரஸ் முடிந்துவிட்டது. காங்கிரஸ் இறந்துவிட்டது” என ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் தலைப்பிட்டு பகிரப்பட்டுள்ளது.

இந்த வீடியோ குறித்த உண்மை சரிபார்ப்பில் வைரலான வீடியோ முழுமையடையாமல் இருப்பது கண்டறியப்பட்டது.

உண்மைச் சரிபார்ப்பு:

வைரலான வீடியோவை சரிபார்க்க, வீடியோவின் கீஃப்ரேம்களை பிரித்தெடுத்து, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, இந்திய தேசிய காங்கிரஸின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வீடியோவின் முழுமையான பதிப்பு கிடைத்தது. மே 3, 2024 அன்று அகமதாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது உரையின் 14வது நிமிடத்தில், “அகமதாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் அடித்தளம் மிகவும் வலுவாக உள்ளது. அதை யாராலும் அழிக்க முடியாது. இதுதான் காங்கிரஸ் கட்சியின் அடித்தளம். அகமதாபாத் நகரில் காங்கிரஸின் அஸ்திவாரம் யாராலும் அகற்ற முடியாத அளவுக்கு வலுவாக உள்ளது. காங்கிரஸை அழிக்க யாருக்கும் துணிவில்லை.

காங்கிரஸின் கதை முடிந்துவிட்டது. காங்கிரஸ் இறந்துவிட்டது, இப்போது காங்கிரஸை எங்கும் காணவில்லை என்று சிலர் பேசுகிறார்கள். இங்குள்ள தலைவர்களே பேசுகிறார்கள். அகமதாபாத் மகாத்மா காந்தியின் புனித இடம். ஆனால் காந்திஜியின் சித்தாந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர நினைக்கும் கருத்தியல்வாதிகள் இந்த மண்ணில் எழுந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது” இவ்வாறு பேசியுள்ளார்.

மேலும், ​​அகமதாபாத்தில் காங்கிரஸின் அடித்தளத்தை யாராலும் அழிக்க முடியாத அளவுக்கு வலுவாக உள்ளது என்று அவர் கூறியதும் தெளிவாகியுள்ளது.

முடிவுரை:

காங்கிரஸின் கதை முடிந்துவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிய வீடியோவின் முழுமையடையாத பகுதியே பகிரப்பட்டு வருவதும், தவறான தகவலுடன் அந்த வீடியோ பகிரப்பட்டு வருவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

Note : This story was originally published byNewschecker’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.