ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்க்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பெரியகுளத்தில் திமுகவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிரதமரை சந்தித்தது தொடர்பாகவும் விளக்கம் அளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பிரதமரிடம் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரிக்கை வைத்ததாகவும், மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினோம் என்றும் கூறிய ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் கர்நாடகா மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று தெரிவித்தார்.
திமுக ஆட்சி காலத்தில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்த போதும் அரசிதழில் வெளியிடப்படவில்லை எனவும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வைத்தது அதிமுகதான் என்றும் பெருமிதம் தெரிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுக பொதுக்குழு தான் சசிகலாவை நீக்கியதாகவும், ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை எனவும், பொதுவாக கூட்டணி கட்சிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவது இயல்பானது என்றும் கூறினார்.
அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் தங்க தமிழ்ச்செல்வன். ஜெயலலிதாவுக்காக தன்னுடைய ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய தங்க தமிழ்ச்செல்வன் மறுத்தார். விடிய விடிய பேசி தங்க தமிழ்ச்செல்வனை ராஜினாமா செய்ய வைத்தோம் என்றும் குறிப்பிட்டார்.