தர்மேந்திர பிரதான் ஊழலின் சின்னமாக திகழ்கிறார்…அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்பதில் எந்த சமரசமும் கிடையாது – ராகுல் காந்தி!

தர்மேந்திர பிரதானை கல்வி அமைச்சரிலிருந்து வேறு ஒரு துறைக்கு மாற்றுவதை ஏற்க முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “மாணவர்கள் 3 கோரிக்கைகளை முன் வைக்கின்றனர், அந்த மூன்று கோரிகைகளில் எந்த சமரசமும் கிடையாது என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். முதலாவதாக, ஊழல்வாதியும், தகுதியும் இல்லாத கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி பறிக்கப்பட வேண்டும்.

தற்போது எங்களுக்கு கிடைத்த தகவலின் படி தர்மேந்திர பிரதானை கல்வி அமைச்சகத்தில் இருந்து வேறு ஒரு துறைக்கு மாற்றுவதற்கு விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது, இது ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயமே கிடையாது. ஏனெனில் தர்மேந்திர பிரதான் ஒரு ஊழலின் சின்னமாக திகழ்கிறார், மேலும் இந்தியாவின் குழந்தைகளின் எதிர்கால வாழ்வை சிதைத்தவர் ஆவார்.

தர்மேந்திர பிரதானை கல்வி அமைச்சரிலிருந்து வேறு ஒரு துறைக்கு மாற்றுவதை ஏற்க முடியாது, அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்பதில் எந்த சமரசமும் கிடையாது. இரண்டாவதாக, காவல்துறை நடத்திய தாக்குதலில் மாணவர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள், பெல்லட் குண்டுகளால் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன, இதை செயல்படுத்தியவர்கள், செயல்படுத்தக் கூறியவர்கள் என அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூன்றாவதாக, இவை அனைத்தும் அரங்கேறுவதற்கு காரணமாக இருக்கக்கூடிய தலைவராக இருக்கும் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கூற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.