”காங்கிரஸ் கட்சியுடன் எங்களுக்கு கோபதாபம் கிடையாது” – ஜி.கே.வாசன் பேட்டி!

முதலமைச்சர் விஜய் விவசாயிகளுக்கு செய்ய வேண்டிய கடமையை நேரடியாக கர்நாடகாவுக்கு சென்று பேசுவது நல்ல முயற்சி என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் தமாக தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, “மேகதாது அணை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும், விவசாயிகள் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும். 2 மாதமாக தண்ணீர் வரவில்லை. விவசாயிகளின் அவல நிலையை நினைத்து பார்க்க வேண்டும். புதிய அரசு பதவி ஏற்றதும் விவசாயிகளுக்கு நம்பிக்கையை கொடுத்தது. முதலமைச்சர் விஜய் விவசாயிகளுக்கு செய்ய வேண்டிய கடமையை நேரடியாக கர்நாடகாவுக்கு சென்று பேசுவது நல்ல முயற்சி. 12 வருடங்களுக்கு பின்னர் ஒரு முதல்வர் கர்நாடகாவுக்கு சென்று தண்ணீர் பெறுவதற்கான உரிமையை நிலைநாட்ட முயல்வது வரவேற்கத்தக்கது.

தமாக கட்சியின் மண்டல கூட்டங்கள் முடிந்த பின் செப்டம்பர் முதல் வாரத்தில், கூட்டணி நிலைப்பாடு குறித்து முடிவு செய்வோம். சட்டம் ஒழுங்கு, கொலை, கொள்ளை குற்றங்களை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். லாக் அப் மரணங்கள் விசாரணைகள் சரியாக நடைபெற வேண்டும். மாணவர் பிரச்சினைகளை மத்திய அரசு பொறுப்போடு அணுகவில்லை. மாணவர் மீது தடியடி நடத்துவது தவறு. காவல்துறையினர் மாணவர்களை பொறுப்பாக நடத்த வேண்டும். தமிழகத்தில் நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்துபவர்களை கைது செய்வது, அமைச்சர்கள் படம் பார்த்து அழுதது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர்,

மாணவர்கள் நீட் வேண்டாம் என போராட்டம் நடத்துகிறார்கள். அதே நிலைப்பாட்டில் தான் தமிழக அரசு இருக்கிறது. போராட்டங்களில் சட்டம் ஒழுங்கு நடைபெறக்கூடாது என்ற கவனமும் அரசுக்கு இருக்கிறது. அமைச்சர்கள் படம் பார்த்து அழுதது தவறு என்ற வாதத்தையை நான் ஏற்கவில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவரவர் சுக துக்கங்களை தடை போட்டு நிறுத்த முடியாது. தனிமனித சுதந்திரத்திற்கு தடையாக இருக்க கூடாது. ஜனநாயகன் படம் ஏன் தடை செய்யப்பட்டது. அதன் பின்னாலுள்ள சிக்கல்களின் அடிப்படையில் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்.

மாணவர் ஆர்பாட்டங்களுக்கு ஒத்துழைப்பு, ஆதரவு அளிப்பதாக தவெக தெரிவித்துள்ளது. எல்லோருக்கும் நீட் போராட்டங்களின் முக்கியத்துவம் தெரியும். அதனடிப்படையில் தவெக கட்சியின் செயல்பாடு இருக்க வேண்டும் என்றார்.

காங்கிரஸ் கட்சி இருக்கும் தவெக கூட்டணியில் அங்கம் வகிப்பீர்களா என்ற கேள்விக்கு, “காங்கிரஸ் கட்சியுடன் எங்களுக்கு கோபதாபம் கிடையாது. எங்கள் குறிக்கோள் காமராஜர் ஆட்சி தான். 60 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது தான் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம். காங்கிரசுடன் மோதல் போக்கு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.