அமைச்சரவையில் துணை முதலமைச்சர் #UdhayanidhiStalin -க்கு 3வது இடம்! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ்நாடு அமைச்சரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3வது இடம் அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குத்…

தமிழ்நாடு அமைச்சரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3வது இடம் அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உடனடியாக அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவைப் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதனிடையே, கடந்த ஆண்டு அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை ஒதுக்கப்பட்டது. இந்தப் பொறுப்பில் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டார்.

இந்நிலையில், கடந்த சில காலமாக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு திமுக நிர்வாகிகள் பேசி வந்தனர். அதன்படி, நேற்று முன்தினம் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், செந்தில் பாலாஜி உள்பட புதிதாக 4 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3வது இடம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை தமிழநாடு அரசு இன்று (செப். 30) வெளியிட்டது. அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து, திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு 2வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஏ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு என ஏற்கெனவே இருக்கும் வரிசைகள் தொடர்ந்துள்ளன. புதிதாக அமைச்சராக பொறுப்பேற்ற சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கு 19வது இடமும், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனுக்கு 27வது இடமும் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2009-ம் ஆண்டு மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் 3வது இடம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.