“பெண்களின் பாதுகாப்புக்கு வேட்டு வைப்பதுதான் தவெக அரசு தரும் பரிசா?” – கனிமொழி

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அவற்றைத் தடுக்காமல் என்ன செய்துகொண்டிருக்கிறது ரீல்ஸ் அரசின் சினிமாத்தனமான அதிரடிப்படை? என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

சாத்தான் குளம் அருகே முன்விரோதம் காரணமாக வீடுபுகுந்து மேரி விஜீலா மற்றும் அவரது கணவர் ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அவர்களது பெண் குழந்தைகளையும் மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். இந்த நிலையில் கடத்தப்பட்ட பெண்குழந்தைகள் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளனர். இச்சமபவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

”சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து மேரி விஜீலா என்கிறப் பெண் வெட்டிப் படுகொலைச் செய்யப்பட்டு, அவரின் இரண்டு பெண் குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளனர். அவரின் கணவரும் மகனும் படுகாயமடைந்துள்ளனர்.

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வீட்டிலும் பாதுகாப்பில்லை, பொது வெளியிலும் பாதுகாப்பில்லை எனும் அளவிற்கு ஓர் அசாதாரணச் சூழலுக்குள் தமிழ்நாட்டைத் தள்ளியிருக்கிறது பொறுப்பற்ற தவெக அரசு.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அன்றாடச் செய்தியாகிக் கொண்டிருக்கும் போது, அவற்றைத் தடுக்காமல் என்ன செய்துகொண்டிருக்கிறது ரீல்ஸ் அரசின் சினிமாத்தனமான அதிரடிப்படை?

தங்களுக்கு வாக்களித்த பெண்களின் பாதுகாப்புக்கு வேட்டு வைப்பதுதான் தவெக அரசு அவர்களுக்குத் தரும் பரிசா?” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.