இந்தியா-சீனா எல்லை மோதல் குறித்து விவாதம் நடத்துவதற்கான நோட்டீசுக்கு அனுமதி வழங்காததால், மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவையில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில், இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்தார்.
அதற்கு அவை தலைவர் ஜெகதீப் தன்கர், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளதாகவும், அவையின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தினார். ஆனால், நமது நிலத்தை சீனா ஆக்கிரமித்திருக்கும் நிலையில், அந்த பிரச்னையை பற்றி பேசாமல், வேறு என்ன பேச வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக அவைத் தலைவர் பேச அனுமதி வழங்காததால், அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.







