டெல்டா பயிர் சேத இழப்பீடு: ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்

டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்…

டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

தமிழ்நாட்டில் ஜனவரி கடைசி வாரத்திலும், பிப்ரவரி முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மற்றும் இதர மாவட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நிவாரண உதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 3 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நெற்பயிர்கள் எதிர்பாராமல் பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவினர் ஒரே நாளில் அரைகுறையாக பார்வையிட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்திருக்கின்றனர். 33 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் சேதத்துக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என திமுக அரசு கூறியுள்ளது.

உரிய மதிப்பீடு செய்யாமல் இழப்பீடு தொகையை அறிவித்திருப்பது ஏற்கதக்கதல்ல. ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் எனும் விவசாயிகள் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என வலியுறுத்துவதாக டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.