வட மாநிலத்தவர் தமிழ்நாட்டுக்கு வருவது ஒருவித போர் தொடுப்பது போன்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே திருமண விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும். இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்பது மாயை.
மக்கள் மாற்றத்தை விரும்பினால் யாரை வேண்டுமானாலும் தூக்கி வீசலாம். நாங்கள் காசு கொடுக்கப் போவதில்லை. ஆனால், அதிகாரிகள் துணையோடு காசு கொடுத்து வருகிறார்கள். கடைசி 3 நாட்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். நான் யாருடனும் கூட்டணி சேர மாட்டேன். கமல்ஹாசன் காங்கிரசுடன் சேர்ந்துள்ளது அவரது தனிப்பட்ட விருப்பம். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஏற்கனவே சிலை வைக்கப்பட்டுள்ளது. மதுரையில் அவரது பெயரில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கடலுக்குள் பேனா வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
கடலின் நிலப்பரப்பை நிரப்பி பேனா வைப்பதாக கூறுவது கண்டிக்கத்தக்கதாகும். கருணாநிதி சிலையை வைப்பது தொடர்பாக பணி தொடங்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும். இந்தியாவின் அடையாளம் காந்தியும் அம்பேத்காரும் தான். ஆர்எஸ்எஸ் தடையை நீக்க உதவியதற்காக வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் குடிநீரில் மனிதக் கழிவுகளை கலந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திராவிட மாடல் ஆட்சி என்பது வேடிக்கையானது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு எதை செய்து உள்ளார்கள்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா செயல்படவில்லை. இலங்கையில் 12 மீனவர்கள் கட்டி சங்கிலியால் கட்டி இழுத்து செல்லப்பட்டனர். இதற்கு திமுக அதிமுக உள்பட எந்த கட்சிகளும் கண்டனம் தெரிவிக்கவில்லை. நாம் தமிழர் கட்சி மட்டுமே கண்டனம் தெரிவித்தது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான் வட மாநிலத்தினர் 2 கோடி பேர் தமிழகத்திற்குள் வந்துள்ளனர். தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் உள்ள மணல் திட்டுகளால் மீனவர்கள் மரணம் அடைந்து வருகிறார்கள். அதை சீரமைப்பதை விட்டுவிட்டு கலைஞருக்கு சிலை வைக்க பணம் செலவு செய்கிறார்கள். பணத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு மக்களுக்காக அந்த பணங்களை செலவு செய்ய வேண்டும்.
டாஸ்மாக் மதுபானங்களை சேமித்து வைக்க குளிர்சாதன அரங்குகளை கட்டும் அரசு டெல்டா மாவட்டங்களில் நெல்களை பாதுகாக்க தவறிவிட்டது. பாரதிய ஜனதா தற்போது வெளியிட்ட பட்ஜெட் தேர்தலுக்காக தயாரிக்கப்பட்டது ஆகும். இவ்வாறு சீமான் கூறினார்.







