கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
பாதிக்கப்பட்டோர், பொதுமக்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் இதுவரை விசாரணை நடத்தி வந்த சிபிஐ, கடந்த மாதம் டெல்லி தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் உள்ளிட்டோரிடம் மூன்று நாட்கள் விசாரணை நடத்தியது. தொடர்ந்து இந்த விசாரணையின் அடுத்தகட்டமாக, தவெக தலைவர் விஜய்யை நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது. சிபிஐ அறிவுறுத்தியபடி இன்று காலை 11.30 மணியளவில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்.
சிபிஐ அதிகாரிகள் 4 பேர் கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜயிடம் விசாரணை நடத்தியதாகவும் அப்போது 90க்கும் மேற்பட்ட கேள்விகள் விஜயிடம் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகின. கேள்விக்கு விஜய் அளிக்கும் பதில்களை சிபிஐ அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்தனர். இந்நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜயிடம் இன்று நடந்த விசாரணை நிறைவுபெற்றுள்ளது.







