விவசாயிகளின் “டெல்லி சலோ பேரணி” மீண்டும் தொடங்கியது!

டெல்லி சலோ பேரணியை விவசாயிகள் இன்று மீண்டும் தொடங்கியுள்ளனர்.  வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம்,  விவசாயக் கடன் தள்ளுபடி,  ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருநூறுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள்,…

டெல்லி சலோ பேரணியை விவசாயிகள் இன்று மீண்டும் தொடங்கியுள்ளனர். 

வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம்,  விவசாயக் கடன் தள்ளுபடி,  ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருநூறுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், க டந்த 13 ஆம் தேதி டெல்லியை நோக்கி செல்லும் பேரணியை தொடங்கின.  இதன் காரணமாக அந்த பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது.

டெல்லிக்குள் விவசாயிகள் நுழைய முடியாத வகையில் அரியானா, பஞ்சாப் மாநில எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.   மேலும்,  டிராக்டர்கள் நுழையாத வண்ணம் பல அடுக்குகள் கொண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டன.  இதனால் அரியானா, பஞ்சாப் எல்லயிைல் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.  கடந்த மாதம் 21-ந்தேதி எல்லையில் விவசாயிகளுக்கும்,  அரியான மாநில போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.   இந்த மோதலில் 21 வயதான சுப்கரன் சிங் என்ற இளம் விவசாயி உயிரிழந்தார்.

அவரது மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும்.  அதுவரை அவரது உடலை வாங்கமாட்டோம் என விவசாய சங்கங்கள் தெரிவித்திருந்தன.  இதனையொட்டி ஒரு வாரம் கழித்து பஞ்சாப் மாநில போலீஸ், கொலை வழக்காக பதிவு செய்தது.  இதற்கிடையே பேரணி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  அதேவேளையில் பஞ்சாப், அரியானா எல்லையில் விவசாயிகள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் அறிவித்தனர்.

அதன்பின் டெல்லியை நோக்கி மிகப் பிரமாண்ட பேரணி நடத்தப்படும்  என்றும் இதில் இந்தியாவில் உள்ள விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.   இதனைத் தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா பகுதிகளில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில் டெல்லி சலோ பேரணியை விவசாயிகள் இன்று மீண்டும் தொடங்கியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.