கைப்பிடித்து இழுத்தாலே செல்லாதவர்கள் கண்ணடித்தால் சென்றுவிடுவார்களா? அதிமுகவுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

திமுக கூட்டணியில் இருப்பவர்களை கையைப் பிடித்து இழுத்தாலும் அதிமுக கூட்டணிக்கு போகமாட்டார்கள் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்படாத நிலையில்…

திமுக கூட்டணியில் இருப்பவர்களை கையைப் பிடித்து இழுத்தாலும் அதிமுக கூட்டணிக்கு போகமாட்டார்கள் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்படாத நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் கூட்டணி கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளதாகவும் கூட்டணிக்கு வந்தால் அதிக சீட் கிடைக்கும் என்றும் நேற்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சரும்,  திமுக பொதுச் செயலாளருமான  துரைமுருகன்,  திமுக கூட்டணியில் உள்ளவர்கள் கையைப் பிடித்து இழுத்தாலும் அதிமுக கூட்டணிக்கு வரமாட்டார்கள் என்றும் கையைப் பிடித்து இழுத்தாலும் வராதவர்கள் கண்ணடித்தால் மட்டும் வருவார்களா என்று கேள்வி எழுப்பினார்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிட அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.  கதிர் ஆனந்த் விருப்பமனு அளித்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,  வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியவர்கள் பொருள் கொடுத்தவர்களுக்கு மட்டுமே வெள்ளத்தைப் பற்றி பேச உரிமை உண்டு.  வானத்தில் பறந்து கூட பார்க்காதவர்களுக்கு வெள்ளத்தை பற்றி பேச உரிமை இல்லை.  குடும்ப அரசியல் செய்கிறார்கள் என்று சொல்லும் மோடி தேசமே குடும்பம் என்று அரசியல் செய்கிறார். வெளிநாட்டில் பல கோடி ரூபாய் இருப்பதாக பாஜகவினர் சொன்னார்கள் அதை மீட்டு பொதுமக்களுக்கு 15 லட்ச ரூபாயை முதலில் கொடுக்க வேண்டும்.

கூட்டணி கட்சிகளுக்கும் சில வேலைகள் இருக்கும் அதில் கவனம் செலுத்துவார்கள். திமுக கூட்டணியில் எந்த பாதகமும் இல்லை.  கைய புடிச்சு இழுத்தா வராதவர்கள் கண்ணடிச்சா எப்படி வருவார்கள்? அந்த மாதிரி திமுக கூட்டணியில் இருப்பவர்கள் கண்ணடித்தாலும் வரமாட்டார்கள் கையைப் பிடித்து இழுத்தாலும் வரமாட்டார்கள்.  ஜெயக்குமார் எப்பவுமே தமாசாக பேசுவார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.