டெல்லியில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஏப்ரல் 19 முதல் 26ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அதற்காக வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், முழு ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை நீட்டித்து முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மற்றும் சப்ளையை கவனிக்க தனிக்குழு தொடங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த குழுவில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஆக்ஸிஜன் பயன்பாட்டை கண்காணிப்பார்கள் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.







