தெற்கு டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவகம் முழுவதும் மளமளவெனத் தீ பரவியதால் அங்குள்ள கட்டிடத்திற்குள் ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், அங்கு சிக்கியிருந்த 11 பேரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது சிகிச்சை பலனின்றி 10 பேர் உயிரிழந்துள்ளதாக டெல்லி போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டன. உணவகத்தின் அடித்தளத்தில் சிக்கியிருந்த மூவரை தீயணைப்பு வீரர்கள் முதற்கட்டமாக மீட்டு ‘கேட்ஸ்’ ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மொத்தம் 37 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் என்ன? சிலிண்டர் வெடித்ததா அல்லது மின் கசிவா என்பது குறித்து டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) அவசர நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “டெல்லி மாளவியா நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியானது மிகுந்த வேதனையளிக்கிறது. தங்களது அன்பிற்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் வழங்கி வருகின்றனர் என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.




