டெல்லி உணவு விடுதியில் தீ விபத்து – 10 பேர் உயிரிழப்பு!

டெல்லியில் உணவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவகம் முழுவதும் மளமளவெனத் தீ பரவியதால் அங்குள்ள கட்டிடத்திற்குள் ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், அங்கு சிக்கியிருந்த 11 பேரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது சிகிச்சை பலனின்றி 10 பேர் உயிரிழந்துள்ளதாக டெல்லி போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டன. உணவகத்தின் அடித்தளத்தில் சிக்கியிருந்த மூவரை தீயணைப்பு வீரர்கள் முதற்கட்டமாக மீட்டு ‘கேட்ஸ்’ ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மொத்தம் 11 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 10 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதாக டெல்லி போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் என்ன? சிலிண்டர் வெடித்ததா அல்லது மின் கசிவா என்பது குறித்து டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.