அவதூறு வழக்கு: தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு..!

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்ய உள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற…

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்ய உள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொரடப்பட்டது.

பிரதமர் மோடி பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. மேலும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் இந்த தண்டனை நிறுத்தியும் வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து வயநாடு நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.

இதனை தொடர்ந்து வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்ய உள்ளார். இதற்காக அவர் நாளை குஜராத் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.