காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரேணுகா சவுத்ரி 2018ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ‘சூர்ப்பனகை’ கருத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு மோடியின் குடும்பப்பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்துள்ளது. இதனையடுத்து, தீர்ப்பை எதிர்த்து ஒற்றுமை ஊர்வலம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதோடு, தொடர்ந்து போராட்டமும் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியின் வழிநடத்தல் குழு உறுப்பினர்கள், பிசிசி தலைவர்கள், சிஎல்பி தலைவர்கள் மற்றும் முன்னணி அமைப்பு தலைவர்கள் ஆகியோரின் அவசர கூட்டத்தை டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று மாலை 5 மணிக்கு கூட்டியுள்ளதாக தகவல்களும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரேணுகா சவுத்ரி, 2018 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கூறப்பட்ட ‘சூர்ப்பனகை’ கருத்துக்காக பிரதமர் மோடி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ரேணுகா தனது ட்விட்டர் பக்கத்தில், பிப்ரவரி 7, 2018 அன்று, ராஜ்யசபாவில் ஆதார் திட்டம் குறித்து மோடி பேசும்போது, தான் சத்தமாக சிரித்ததாகவும். அப்போது, அப்போதைய தலைவர் வெங்கையா நாயுடு குறுக்கிட்ட போது, பிரதமர் மோடி, ரேணுகாவிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதோடு, ராமாயணத் தொடருக்குப் பிறகு இப்படிப்பட்ட சிரிப்பைக் கேட்கும் பாக்கியம் கிடைத்தது. அதனால் ரேணுகா சவுத்ரியை தொடர அனுமதிக்குமாறு பிரதமர் மோடி, வெங்கையா நாயுடு அவர்களிடம் கேட்டு கொண்டதாக கூறியுள்ளார்.
மேலும் அந்த பழைய வீடியோவையும் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரேணுகா சவுத்ரி, இப்படி சூசகமாக என்னை ‘சூர்ப்பனகை’ என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், “இப்போது, நீதிமன்றங்கள் எவ்வளவு விரைவாக செயல்படும் என்பதை பார்ப்போம்’ என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும், பல சமூக ஊடக பயனர்கள் ரேணுகாவின் கூற்று தவறானது என்றும், பிரதமர் மோடி அவரை ‘சூர்ப்பனகா’ என்று அழைக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா









