தீபத்தூண் விவகாரம்: தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக விசிக ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளதாகக் கூறி, தவெக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இது தொடர்பாகப் பதிவிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கு எதிராக விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த மதுரை காவல்துறை அனுமதி வழங்கியிருப்பது குறித்து அவர் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

மேலும், காலையில் பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறை, சில மணி நேரங்களிலேயே ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கியது யாருடைய அழுத்தத்தால் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது:

நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

“திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அத்தீர்ப்பை எதிர்த்து மதுரையில் விசிக தலைவர் திரு. திருமாவளவன் தலைமையில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தக் காவல்துறை அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காலையில் பேரணிக்கு அனுமதி மறுத்த மதுரை காவல்துறை, சில மணி நேரங்களிலேயே ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் அவசரமாக அனுமதி வழங்கியது யாருடைய அழுத்தத்தால்? சட்டம்-ஒழுங்கைக் காரணம் காட்டிப் பேரணிக்குத் தடை விதித்த காவல்துறை, ஆளும் தவெக அரசின் கூட்டணிக் கட்சியான விசிகவுக்கு மட்டும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்திருப்பது அப்பட்டமான இரட்டை வேடமாகும்.

நாளை கார்த்திகை தீபத் திருநாள் நடைபெறவுள்ள சூழலில், மதுரையின் அமைதியைக் குலைக்கும் இத்தகைய ஆர்ப்பாட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை தவெக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். கூட்டணி நெருக்கடிகளுக்கும் வாக்கு வங்கி அரசியலுக்கும் அடிபணியாமல், உச்சநீதிமன்ற ஆணைப்படி நாளை தீபத்தூணில் எவ்விதத் தடையுமின்றி தீபம் ஏற்றப்படுவதையும் முழுமையான பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.