ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ESA) மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) இணைந்து BepiColombo என்ற விண்வெளித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கிரகத்தின் மேற்பரப்பு, உட்புற அமைப்பு, காந்தப்புலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்வதாகும். கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் விண்ணில் ஏவப்பட்ட BepiColombo விண்கலம், தற்போது புதன் கிரகத்தின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்துள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம், புதன் கிரகத்தைச் சுற்றிவரும் செயற்கைக்கோளாக மாறிய இரண்டாவது விண்கலம் என்ற பெருமையை BepiColombo பெற்றுள்ளது. இதற்கு முன்பு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் MESSENGER விண்கலம் இந்தச் சாதனையைப் படைத்திருந்தது. புதன் கிரகத்தை மிக அருகில் ஆய்வு செய்வதற்காக, BepiColombo விண்கலம் நீள்வட்ட வடிவிலான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் மிக அருகிலான சுற்றுப்பாதை உயரம் சுமார் 590 கி.மீ. ஆகவும், அதிகபட்ச தொலைவு சுமார் 11,640 கி.மீ. ஆகவும் உள்ளது.

புதன் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நுழைந்தது எப்படி?
ஒரு கிரகத்தின் ஈர்ப்பு விசையால் விண்கலம் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட வேண்டுமானால், அதன் வேகத்தைக் குறைப்பது அவசியம். அதன்படி, BepiColombo விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஐரோப்பாவின் Mercury Planetary Orbiter (MPO) விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த நான்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. புதன் கிரகத்தின் தென் துருவப் பகுதியை விண்கலம் நெருங்கியபோது இந்த இயந்திரங்கள் இயக்கப்பட்டன.
சுமார் 37 நிமிடங்கள் தொடர்ந்து இயங்கிய இந்த இயந்திரங்கள், விண்கலத்தின் வேகத்தைக் குறைத்து புதன் கிரகத்தின் ஈர்ப்பு விசைக்குள் நுழைய உதவின. மேலும், புதன் கிரகத்தின் இரவுப் பகுதி வழியாக விண்கலம் அணுகியது. வேகத்தைக் குறைக்கும் நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதன் கிரகத்தின் முதல் சுற்றுப்பாதையில் BepiColombo நிலைநிறுத்தப்பட்டது. சூரியனுக்கு மிக அருகில் புதன் கிரகம் இருப்பதால் அங்கு நிலவும் கடுமையான வெப்பம் விண்கலங்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதேபோல், கிரகத்தின் சுற்றுப்பாதையில் நுழைவதற்குத் தேவையான வேக மாற்றமும் மிகவும் கடினமானதாகும்.
ஒரே கிரகத்தை ஆய்வு செய்யும் இரண்டு விண்கலங்கள்!
BepiColombo திட்டத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், இதில் இரண்டு தனித்தனி அறிவியல் ஆய்வு விண்கலங்கள் இடம்பெற்றுள்ளன. ஐரோப்பாவின் Mercury Planetary Orbiter (MPO) மற்றும் ஜப்பானின் Mercury Magnetospheric Orbiter (Mio) ஆகிய இரண்டு விண்கலங்களும் புதன் கிரகத்தின் வெவ்வேறு அம்சங்களை ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
MPO விண்கலம்: புதன் கிரகத்தின் மேற்பரப்பு, வேதியியல் கலவை மற்றும் உட்புற அமைப்பு உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்யும்.
Mio விண்கலம்: புதன் கிரகத்தின் காந்தப்புலம் மற்றும் சூரியனிலிருந்து தொடர்ந்து வெளியேறும் மின்னூட்டம் கொண்ட துகள்களின் ஓட்டமான சூரியக் காற்றுடன் (Solar Wind) கிரகம் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதை ஆய்வு செய்யும்.
இந்த இரண்டு விண்கலங்களும் வரும் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தனித்தனியாகப் பிரிந்து, சுயமாகச் செயல்படத் தொடங்க உள்ளன. இதன் மூலம், புதன் கிரகத்தின் சுற்றுப்பாதையில் ஒரே நேரத்தில் இரண்டு தனித்தனி ஆய்வு விண்கலங்கள் செயல்படும் முதல் விண்வெளித் திட்டமாக BepiColombo அமைய உள்ளது. ஐரோப்பாவின் MPO விண்கலம் 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தனது இறுதி ஆய்வுச் சுற்றுப்பாதையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, 2027-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முழுமையான அறிவியல் ஆய்வுகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன.
புதன் கிரகம் ஏன் இன்னும் மர்மமாக உள்ளது?
சூரியக் குடும்பத்தில் பூமிக்கு ஒப்பீட்டளவில் அருகில் இருந்தாலும், இதுவரை மிகக் குறைவாக ஆய்வு செய்யப்பட்ட கிரகங்களில் ஒன்றாக புதன் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அங்கு நிலவும் கடுமையான வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் ஏற்படும் சவால்களாகும். புதன் கிரகத்தின் பகல் நேரத்தில் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 450 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். அதேநேரத்தில், இரவு நேரத்தில் வெப்பநிலை மைனஸ் 180 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்.

வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் திறன் கொண்ட வளிமண்டலம் புதன் கிரகத்தில் கிட்டத்தட்ட இல்லாததால், பகல் மற்றும் இரவு நேரங்களுக்கு இடையே இத்தகைய மிகப்பெரிய வெப்பநிலை வேறுபாடு ஏற்படுகிறது. மேலும், சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் விண்கலங்களில் உள்ள அறிவியல் கருவிகளைப் பாதுகாப்பதும் பெரும் சவாலாக உள்ளது.
இந்நிலையில், BepiColombo திட்டத்தின் மூலம் புதன் கிரகத்தின் புவியியல் அமைப்பு, உட்புறக் கட்டமைப்பு, காந்தப்புலம் மற்றும் சூரியக் காற்றின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஒரே நேரத்தில் ஆய்வு செய்ய முடியும். இதன் மூலம், சூரியக் குடும்பத்தில் இன்னும் பல மர்மங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள புதன் கிரகம் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற முடியும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.




