ஆசியப் பிரயாந்தியத்தில் செல்வாக்குமிக்க நாடுகள் பட்டியல் 2026: இந்தியாவுக்கு 3-வது இடம்!

லோவி இன்ஸ்டிடியூட் வெளியிட்ட 2026-ம் ஆண்டுக்கான ஆசிய பவர் இன்டெக்ஸ் அறிக்கையில், ஆசியப் பிரயாந்தியத்தில் செல்வாக்குமிக்க நாடுகள் பட்டியலில் இந்தியா 40.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தைத் தக்கவைத்துள்ளது.

ஆசிய பிராந்தியத்தில் நாடுகளின் அரசியல், பொருளாதாரம், ராணுவம் மற்றும் ராஜதந்திர வலிமை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் ஆண்டுதோறும் ஆசிய பவர் இன்டெக்ஸ் (Asia Power Index) அறிக்கை வெளியிடப்படுகிறது.

அந்த வகையில், லோவி இன்ஸ்டிடியூட் (Lowy Institute) வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டுக்கான அறிக்கையில், ஆசியப் பிரயாந்தியத்தில் செல்வாக்குமிக்க நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டுகளைவிட இந்தியாவின் ஒட்டுமொத்த சக்தி மதிப்பெண் உயர்ந்து 40.5 புள்ளிகளாக உள்ளது.

அதேபோல், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வலிமை இடைவெளி குறைந்து வருவதாகவும், ஆசிய பிராந்தியத்தில் அதிகாரப் போட்டி தீவிரமடைந்து வருவதாகவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆசிய பிராந்தியத்தில் முதல் 3 சக்திவாய்ந்த நாடுகள்!

2026-ம் ஆண்டுக்கான ஆசிய பவர் இன்டெக்ஸ் பட்டியலில் அமெரிக்கா 78.9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சீனா 73.6 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், இந்தியா 40.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் வெறும் 5.3 ஆகக் குறைந்துள்ளது. 2018-ம் ஆண்டு இந்தக் குறியீடு தொடங்கப்பட்டதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான மிகக் குறைந்த இடைவெளி இதுவாகும்.

குறிப்பாக, ராணுவத் திறனைப் பொறுத்தவரையிலும் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வித்தியாசம் இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. இந்தப் பட்டியலில் ஜப்பான் 38.6 புள்ளிகளுடன் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவும் ஜப்பானும் ஆசியாவின் முக்கிய சக்திவாய்ந்த நாடுகளாகத் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன.

ஆசியத் தலைவர்களில் மோடிக்கு 2-வது இடம்!

ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒட்டுமொத்த சக்தி இடைவெளி 2018-ம் ஆண்டு ஆசிய பவர் இன்டெக்ஸ் அறிக்கை தொடங்கப்பட்டதிலிருந்து மிகக் குறைந்த அளவுக்குச் சரிந்துள்ளது. இருப்பினும், இந்தியாவைவிட சீனாவின் ஒட்டுமொத்த சக்தி இன்னும் 80 சதவீதம் அதிகமாக இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.

இதற்கிடையில், ஆசியாவின் பிராந்தியத் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் முதலிடத்தில் உள்ளார். முந்தைய தரவரிசையுடன் ஒப்பிடும்போது மோடி 3 இடங்கள் முன்னேறியுள்ளார். ஆனால், பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமைத்துவம் மற்றும் இந்தியாவின் ராஜதந்திர இலக்குகள் குறித்த மதிப்பீடுகள் சரிவைக் கண்டுள்ளதாகவும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, வளைகுடா பிராந்திய மோதலின்போது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரான் கடற்படைக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்தியாவின் மிதமான எதிர்வினை, இந்தியாவின் ராஜதந்திரச் செயல்பாடுகள் குறைந்த அளவில் வெளிப்பட்டதற்கான உதாரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ராஜதந்திர செல்வாக்கில் இந்தியா வலுவாக உள்ளது!

இந்தியாவின் ராஜதந்திரச் செல்வாக்கு (Diplomatic Influence) 70.3 புள்ளிகளுடன் தொடர்ந்து வலுவான அம்சமாக உள்ளது. பெரும்பாலான நாடுகளின் மதிப்பெண்கள் சரிந்த ஆண்டிலும் இந்தியாவின் மதிப்பெண் மிகக் குறைந்த அளவிலேயே சரிந்துள்ளது. அதேநேரத்தில், இந்தியாவின் பொருளாதாரத் திறனுக்கான மதிப்பெண் 26.4 புள்ளிகளாகச் சற்றுக் குறைந்துள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கணக்கீட்டு முறையில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் வெளிநாடுகளில் இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்படும் முதலீடுகளில் சுமார் 20 பில்லியன் டாலர் சரிவு ஆகியவை இந்தியாவின் ஒப்பீட்டளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பீட்டைப் பாதித்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் ராஜதந்திர செல்வாக்கு சரிவு!

2026-ம் ஆண்டில் அமெரிக்கா தனது ராஜதந்திரச் செல்வாக்கில் இதுவரை இல்லாத அளவுக்குச் சரிவைச் சந்தித்துள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் ஒருதலைப்பட்ச வெளியுறவுக் கொள்கைகள், வர்த்தக வரிகள் மற்றும் ஈரானுடனான போர் ஆகியவை ஆசிய நாடுகள் மத்தியில் அமெரிக்காவின் செல்வாக்கைப் பாதித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

மேலும், சர்வதேச அமைப்புகளுடனான அமெரிக்காவின் உறவில் ஏற்பட்டுள்ள விரிசல், தைவானுக்கான ஆயுத விற்பனை மற்றும் தென்கொரியாவுடனான ராணுவப் பயிற்சிகள் தொடர்பாக டிரம்ப் தெரிவித்த கருத்துகள் ஆகியவையும் அமெரிக்காவின் தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கையைக் குறைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அமெரிக்காவின் ராஜதந்திரச் செல்வாக்கு மதிப்பெண் 6 புள்ளிகள் குறைந்து 76.7 ஆக உள்ளது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக அமெரிக்காவின் மதிப்பெண் சரிந்துள்ளது. 2018-ம் ஆண்டு ஆசிய பவர் இன்டெக்ஸ் தொடங்கப்பட்டதிலிருந்து ஒரே ஆண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவும் இதுவாகும்.

27 நாடுகளின் வலிமையை மதிப்பிடும் அறிக்கை!

2026-ம் ஆண்டுக்கான ஆசிய பவர் இன்டெக்ஸ் அறிக்கை, ஆசியாவின் 27 நாடுகள் மற்றும் பிராந்தியங்களை மதிப்பீடு செய்துள்ளது. பொருளாதாரத் திறன், ராணுவத் திறன், நாட்டின் நிலைத்தன்மை, ராஜதந்திரச் செல்வாக்கு, பொருளாதார உறவுகள் உள்ளிட்ட 8 முக்கிய அம்சங்களின் அடிப்படையில் மொத்தம் 131 குறியீடுகள் மூலம் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான போட்டி தீவிரமடைந்து வருவதையும், இந்தியா தனது ஒட்டுமொத்த சக்தி மற்றும் பிராந்தியத் தலைமைத்துவ நிலையில் முன்னேற்றம் கண்டு வருவதையும் வெளிப்படுத்துகிறது. அதேவேளையில், உலக அரசியலில் நாடுகளின் செல்வாக்கு தொடர்ந்து மாறிவருவதையும் சுட்டிக்காட்டுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.