அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்யும் தமிழ்நாடு அரசின் முடிவிற்கு தடைவிதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறநிலையத்துறையின் கோயில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் பணிநியமனத்திற்கு வகுத்துள்ள விதிகள் செல்லும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்கள், அங்குப் பின்பற்றப்படும் ஆகமங்கள், ஆகம விதிகளைப் பின்பற்றாத கோயில்கள் எவை எனக் கண்டறிய இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோரைக் கொண்ட 5 பேர் குழுவை நியமிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தமிழ்நாட்டில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு துலியா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில், அறநிலையத்துறை கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்போதைய நிலையில், வழக்கில் இடைக்கால தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்தனர். மேலும், மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்குமாறும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.







