கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கபப்ட்டுள்ளது
கோவை சரக டிஐஜி விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக இவர் பணியாற்றியுள்ளார்.
அதேபோல சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார்.
குரூப் 1 தேர்வு எழுதி டிஎஸ்பியாக பதவி ஏற்றபின் இரு ஆண்டுகளுக்கு பின்பு ஐபிஎஸ் தேர்வில் தமிழ் வழியில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர், முதன்முதலாக வள்ளியூரில் ஏஎஸ்பியாக பதவி ஏற்றார். சாத்தான்குளம் இரட்டை கொலை சிபிசிஐடி எஸ் பி ஆக அப்பொழுது பணியாற்றி விசாரணை நடத்தினார்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..
கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் , இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். விஜயகுமார் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர்.
அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.







