பங்காரு அடிகளார் மறைவு – பாஜக தலைவர்கள் அஞ்சலி!

பங்காரு அடிகளார் மறைவுக்கு ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் விவசாயக் குடும்பத்தில் கடந்த 1941-ம் ஆண்டு…

பங்காரு அடிகளார் மறைவுக்கு ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் விவசாயக் குடும்பத்தில் கடந்த 1941-ம் ஆண்டு பிறந்தவர் பங்காரு அடிகளார்.  பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர், ஆசிரியையாகப் பணியாற்றிய லட்சுமி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்பழகன், செந்தில்குமார் என இரு மகன்கள் உள்ளனர்.

1970-ம் ஆண்டு முதல் சக்தி பீடத்தை நிறுவி அருள்வாக்குக் கூறிவந்த பங்காரு அடிகளார், பெண்கள் கருவறைக்குள் சென்று வழிபடலாம் என்பதையும், எல்லா நாட்களிலும் எல்லாப் பெண்களும் கோயிலுக்குள் சாமியை வழிபடலாம் என்ற புரட்சியையும் ஏற்படுத்தினார். கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி, இறுதி காலம் வரை ஆன்மிகத்துக்கும் கல்விக்கும் தொண்டாற்றி வந்தார்.

இதனைடையே நேற்று ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனரான பங்காரு அடிகளார், தனது 83வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். கடந்த ஓராண்டாகவே சிகிச்சை பெற்று வந்த பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார். அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவருடைய உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

“சிவப்பு ஆடை அணிந்து நம் எல்லோராலும் சிவப்பு ஆடை சித்தர் என்று அன்போடு போற்றப்பட்டவர்.  ஆன்மீக உணர்வு கொண்ட எவருக்கும் இது பெரிய இழப்பு. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் அடித்தட்டில் இருக்கக்கூடிய மக்களுக்கும் இந்து மதம் சொந்தம் என்று கடவுள் அருள் அனைவருக்கும் கிடைக்க பட்டிதொட்டியெல்லாம் எடுத்து சென்றவர்.  பங்காரு அடிகளார் மறைவு தமிழ்நாடு மட்டுமின்றி உலகத்திற்கே பெரிய இழப்பு என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:

“பங்காரு அடிகளாரின் மறைவு நமக்கு மிக பெரிய பேரிழப்பு.  ஆன்மீகத்தை ஏழை எளிய மக்கள் மத்தியில் எடுத்து சென்றவர்.  கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விரதம் இருந்து வந்து பக்தர்கள் தரிசனம் செய்வர்.  ஆன்மிகத்தை மட்டும் இன்றி கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்த்தார்.  ஒவ்வொரு கிராமங்களிலும் ஆன்மிக வழிபாட்டு மன்றங்களின் ஆன்மிகத்தை கொண்டு சேர்த்தார்.  2019 ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருது கொடுத்து பங்காரு அடிகளாரின் சேவையை பாராட்டி மோடி அரசு கௌரவித்தது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை தெரிவித்ததாவது..

தமிழகத்தில் ஆன்மிகத்தை வளர்ப்பதில் பெரும் பங்காற்றியவர். ஆன்மிகத்தில் பெண்களுக்கும் சமத்துவத்தை ஏற்படுத்தி பூஜை செய்ய பெண்களுக்கும் அனுமதி ஏற்படுத்தி கொடுத்தவர் பங்காரு அடிகளார்.  மேலும் அவர் பிரதமருக்கு நெருக்கமான ஆன்மிகவாதி.

பெண்களும் கடவுளுக்கு பூஜை செய்யலாம் என்று கொண்டு வந்தார். பாஜக தேசியத் தலைவர் நட்டா,  உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.  பங்காரு அடிகளாரின் அறிவு முழு இந்தியாவிற்கே உதவியது.  தமிழக அரசு அரசு மரியாதையோடு அடக்கம் செய்ய தெரிவித்து உள்ளது.  பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்றும் நாளையும் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.