கோடையில் ஏற்படும் மின்வெட்டை தடுக்க மின்வாரியம் புதிய வியூகத்தை வகுத்துள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் அனல், புனல், காற்றாலை, சூரிய மின்சக்தி மற்றும் எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களின் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கோடை வெயிலின் தாக்கத்தில் வீட்டில் பயன்படுத்தப்படும் மின் சாதனங்கள் தொடங்கி பெரிய நிறுவனங்கள் வரை மின் தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அடுத்து வரக் கூடிய ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் என்பதால் மக்களை பாதிக்காத வகையில், மின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு மின்சார வாரியம் தள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு தற்போதே மின்சார வாரியம் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக செயல்படுத்த தொடங்கியுள்ளது.
நடப்பாண்டில் தமிழ்நாட்டின் அதிகபட்ச மின் நுகர்வு நேற்று ( மார்ச் 15 ) தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக மெகாவாட் அளவில் 17,749 மெகாவாட் ஆகும். இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டை விட கூடுதலாக இருந்தாலும், எவ்வித தடங்கலுமின்றி இந்த மின் நுகர்வை மின்வாரியம் எதிர்கொண்டு சமாளித்தது.
தமிழ்நாட்டின் தற்போதைய மின் தேவை 16,500 முதல் 17,500 மெகா வாட் வரை உள்ளது. அடுத்து வரக்கூடிய ஏப்ரல், மே மாதங்களில்,18,000 மெகவாட்டாக அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடை காலத்தில் உச்சபட்சமாக தேவைப்படும் 18,509 மெகாவாட் மின்சாரத்தை பூர்த்தி செய்வதற்கான முன்னேற்பாடுகளையும் மின்வாரியம் செய்து முடித்துள்ளது.
அனல், புனல் மின் நிலையங்கள் மாநில மற்றும் மத்திய தொகுப்புகளின் மூலம் 8,959 மெகாவாட்டும். தமிழ்நாட்டிலுள்ள காற்றாலைகள் மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 4,750 மெகாவாட்டும் திட்டமிடப்பட்டுள்ளது. நீண்ட மற்றும் நடுத்தர கால கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலம் தினசரி 2,752 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மீதம் தேவைப்படும் 1500 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.8.50 விலையில் பெறுவதற்கு மின்பகிர்மான கழகம் சார்பில் டெண்டர் அறிவிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.
தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுவது குறைக்கபட்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு சொந்தமான அனல் மற்றும் புனல் மின் உற்பத்தி நிலையங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு சொந்தமான அனல்மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து பிப்ரவரி 2022 வரை 18,535 மில்லியன் யூனிட்டுகளாக பெறப்பட்ட மின்சாரம், இந்த ஆண்டு பிப்ரவரி 2023 வரை 20,307 மில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, 5 அனல் மின் உற்பத்தி நிலையங்களிலும் சேர்த்து நிலக்கரி 11 நாட்களுக்கு கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலான நிலக்கரியினை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு இறக்குமதி செய்வதற்கு ஏதுவாக அதிக கொள்ளளவு கொண்ட 12 பெரிய கப்பல்கள் மூலம் நிலக்கரியினை கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
வரும் நாட்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், மின்நுகர்வு அதிகரிக்கும் என்பதால், கோடைகால மொத்த மின் தேவையை கருத்தில் கொண்டு தமிழக மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க மின்சார வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. மின்வெட்டில்லா மாநிலங்களில் தமிழ்நாடு முற்றிலும் வேறுபட்ட முதன்மை மாநிலமாக திகழ மின்வாரியம் புதிய முயற்சிகளை தொடங்கியுள்ளது.
- விக்னேஷ், நியூஸ் 7 தமிழ், சென்னை







