சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை மாணவிகளுக்கு வழங்கப்பட்ட நன்னடத்தை சான்றிதழில் குளறுபடி இருப்பதாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலைகழகத்தின் கீழ் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இப்பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறையில் கடந்த ஆண்டு முதுகலை பட்டபடிப்பை முடித்த 9 மாணவிகளுக்கு வழங்கிய நன்னடத்தை சான்றிதழில் திருப்தி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சான்றிழதை பெற்றுகொள்ள வந்த மாணவிகள் இதனைபார்த்து அதிர்ச்சியடைந்தனர்.இதனால் சான்றிழதை வாங்காமல் திரும்பிச் சென்றனர். மேலும் பெற்றோருடன் துணை வேந்தரை சந்திப்பதற்காக அவர்கள் முயன்றனர். ஆனால் அவர்களை சந்திக்காமல் துணைவேந்தர் தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த மாணவிகள் தங்கள் பெற்றோருடன் துணைவேந்தர் அலுவலகம் முன்பு அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாணவிகள் கூறுகையில் தங்கப்பதக்கம் வென்ற எங்களுக்கு எதன் அடிப்படையில் இவ்வாறு தரப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர். இது பல்கலைகழகத்தின் பழிவாங்கும் செயல் என்றும் குற்றம்சாட்டிய அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் பாலகுருநாதன் கூறுகையில்,மாணவிகளிடம் கடிதம் பெற்று துணைவேந்தருக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை பரிசீலித்து புதிய மாற்று சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கையை துணைவேந்தர் எடுப்பார் என்று தெரிவித்தார்.
–வேந்தன்







