மகள் காதல் திருமணம்; குடும்பத்தையே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த அவலம்

இளம்பெண் ஒருவர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் பெண்ணின் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கட்டையாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன்.…

இளம்பெண் ஒருவர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் பெண்ணின் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கட்டையாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன். விவசாயம் செய்து வரும் இவர் பெட்டிகடையும் நடத்திவந்துள்ளார். இவருக்கு மூன்று மகள்கள், மூன்றாவது மகளான முத்துலட்சுமி மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனால் ஊர் முக்கியஸ்தர்கள் சிலர் பழனியப்பன் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

இதனால் பழனியப்பனின் கடைக்கு யாரும் செல்வது கிடையாது, அவரது குடும்பத்தினருடன் யாரும் பேசுவதும் கிடையாது. இதுபோலவே அவரின் மூத்த மகள் பொன்னழகு, இரண்டாவது மகள் மணி ஆகிய இருவரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். பழனியப்பனின் சகோதரி அழகி என்பவரையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து, அவரை விவசாய வேலை கூலி வேலைக்கு அழைத்துச் செல்வது கிடையாது. இந்நிலையில் மனம் நொந்து வாழ்வாதாரம் இழந்த சூழ்நிலையில் அவரது மகன் ஆனந்த் கோயமுத்தூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இப்படி இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்த பழனியப்பன் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனை அடுத்து ஊர் கட்டுப்பாட்டை மீறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாக ஊரில் உள்ள சிலர் பழனியப்பனை அடித்து விடுவதாகவும் வீட்டை தீவைத்து கொளுத்தி விடுவதாகவும் தொடர்ந்து மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் இன்று பழனியப்பனின் களத்து வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். பின்பு அருகில் உள்ளவர்கள் தீயை அனைத்துள்ளனர். களத்து வீட்டிற்கு சென்று எரிந்து கிடந்த தனது வீட்டை பார்த்து பழனியப்பன் குடும்பத்தினர் கதறி அழுது பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக பொன்னமராவதி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இது பற்றி நியூஸ் 7 தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில், “எனது சமுதாயத்தைச் சேர்ந்த எனது மக்கள் என்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். இது தொடர்பாக புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். காவல்துறையினர் ஊர்காரர்களிடம் பேசினார்கள். பின்பு ஒரு மாத காலத்தில் மீண்டும் தங்களை ஊரில் சேர்த்துக் கொள்வார்கள் என்று கூறினர் . ஆனால் அவர்கள் கூறியது போல் என்னை ஊரில் சேர்த்துக் கொள்ளவில்லை. என்னை சேர்த்துக் கொள்ளாததால் மீண்டும் நான் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்றேன். அப்பொழுது இருவர் என்னை வழிமறித்து, தடுத்து காவல் நிலையத்திற்கு சென்றால் உன்னை அடித்து விடுவோம் உன் வீட்டிற்கு தீ வைத்து கொளுத்தி விடுவோம் என்று மிரட்டினார்கள். பின்பு நான் அமைதியாக இருந்துவிட்டேன்.

இந்நிலையில் எனது களத்து வீடானது தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. சொந்த ஊரிலேயே அந்நியன் போல் வாழ்ந்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இப்படியே இருந்தால் நான் உயிர் வாழ்வதில் அர்த்தமே இல்லை. நான் ஊரில் அனைவரிடனும் சேர்ந்து ஒற்றுமையாக வாழ நினைக்கிறேன் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

காதல் திருமணம் செய்தவர்கள், மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நவீன காலத்தில் மாற்று சாதியினரை திருமணம் செய்துகொண்டதால் ஊரை விட்டு ஒதுக்கிவைத்த அவலமும் நிகழ்ந்துள்ளது. இது போன்ற செயல்களுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற கேள்வி எழாமல் இல்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.