ட்ரோன்களை பயன்படுத்தி எல்லை தாண்டிய ஆயுத சப்ளை நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் சார்பாக ஏப்ரல் 10ம் தேதி ”சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களின் ஏற்றுமதிகளில் விதிமீறல்களால் ஏற்படும் அபாயங்கள்’’ எனும் தலைப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் சார்பாக ஐநா சபைக்கான இந்தியத் தூதர் ருசிரா காம்போஜ் கலந்து கொண்டார். ட்ரோன்களைப் பயன்படுத்தி எல்லை தாண்டிய ஆயுத சப்ளை நடைபெறுகிறது. இதன் மூலம் இந்தியா எல்லை பாதுகாப்பில் “கடுமையான சவாலை” எதிர்கொள்கிறது என ருசிரா காம்போஜ் தெரிவித்தார்.
இந்த எல்லை தாண்டிய ஆயுத சப்ளை அரசாங்கத்தின் தீவிரமான ஆதரவு இல்லாமல் சாத்தியமில்லை என பாகிஸ்தானை வெளிப்படையாகக் குற்றம் சாட்டிய அவர் சர்வதேச சட்டத்தை மீறி ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வது புவி சார் அரசியலில் பதற்றத்தை அதிகரிக்கிறது என தெரிவித்தார்.
பயங்கரவாத அமைப்புகளால் வாங்கப்பட்டுள்ள ஆயுதங்களின் அளவு அதிகரித்துள்ளது மற்றும் அவற்றின் தரம் ஆகியவற்றை கவனிக்கும்போது அரசின் ஆதரவும் உதவியும் இல்லாமல் இது சாத்தியமில்லை என்பது நமக்கு நினைவூட்டுகின்றன என இந்தியாவுக்கன ஐநா தூதர் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி எல்லை தாண்டிய ஆயுதங்களை சப்ளையில் நடைபெறுவதால் நாங்கள் கடுமையான சவாலை எதிர்கொள்கிறோம் எனவும் இந்த முறைகேடு குறிப்பிட்ட பிராந்தியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகளின் ஆதரவில்லாமல் சாத்தியமில்லை என பாகிஸ்தானை வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.
ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்கள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையால் (பிஎஸ்எஃப்) அடிக்கடி சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 1ம் தேதி ஜம்முவில் உள்ள எல்லைப்பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது . கடந்த சில வாரங்களில் இது இரண்டாவது சம்பவமாகும். இதற்கு சம்பந்தப்பட்ட நாட்டின் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என ருசிரா காம்போஜ் தெரிவித்தார்.







