நடிகர் தனுஷை தனது மகன் என வழக்கு தொடர்ந்த கதிரேசனின் மரணபனுவை சேகரித்துப் பாதுகாக்க வேண்டும் என மதுரை ராஜாஜி மருத்துவமனை டீனிடம் அவரது வழக்கறிஞர் மனு அளித்துள்ளார்.
நடிகர் தனுஷை தனது மகன் எனக்கூறி மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி
தம்பதியினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள
நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக கதிரேசன் (70) மதுரை அரசு ராஜாஜி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கதிரேசன் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், வழக்கின் விசாரணைக்காக அவரது மரபணுவை (டி.என்.ஏ) சேகரித்துப் பாதுகாக்க வேண்டும் எனக்கூறி அவரது மனைவி மீனாட்சி மற்றும் வழக்கறிஞர் டைட்டஸ் ஆகியோர் மருத்துவமனை டீன் ரத்தின வேலிடம் கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் வழக்கறிஞர் டைட்டஸ் அளித்த பேட்டியில், “நடிகர் தனுஷின் அப்பா கதிரேசனின் உடல்நிலை மோசமாக உள்ளது. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கதிரேசன் உயிருக்கு ஆபத்து ஏற்பட கூடும் என்பதால், அவரது டி.என்.ஏ. வை எடுத்து பராமரிக்க வேண்டும் என மனு அளித்து உள்ளோம். ஏற்கனவே வழக்கு விசாரணையின் போது நடிகர் தனுஷ் அவரது அங்க அடையாளத்தை லேசர் மூலம் அழித்து இருந்தார்.
பள்ளிக்கூட சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைத் தவறாகத்
தாக்கல் செய்துள்ளார். எனவே, தனுஷின் பெற்றோர் கதிரேசன் – மீனாட்சி ஆகியோர்
தான் என்பதை ஆவணங்கள் உறுதி செய்கின்றது. எங்கள் மீது 10 கோடி ரூபாய் நஷ்ட
ஈடு கேட்டு வழக்குப் பதிவு செய்வோம் என்று சொன்ன தனுஷ் இதுவரை வழக்குப் பதிவு
செய்யவில்லை. தனுஷ் உண்மையை மறைக்கப் பார்க்கிறார். இது ஒரு கதிரேசனின் பிரச்சனை அல்ல. இப்படி எத்தனையோ பெற்றோர் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்” என தெரிவித்தார்.







