கொரோனாவால் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 87 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
நாட்டில் தீவிரமாகப் பரவிய கொரோனா அலை முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், மீண்டும் தொற்று பாதிப்பு தலைதூக்கத் தொடங்கியுள்ளது. கேரளா, புதுச்சேரி, புதுடில்லி, ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் முக கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில அரசுகளும் விழிப்புடன் செயல்பட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் கொரோனாவால் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 87 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உடல்நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதை தொடர்ந்து சிகிச்சை நடைபெற்ற நிலையில் இன்று கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நோய் தொற்று குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 401 பேர் புதிதாக கொரோனா பாதிப்பு அடைந்துள்ளனர்.
இதில், 215 ஆண்கள் மற்றும் 186 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக சென்னையில் 110 பேருக்கும், செங்கல்பட்டில் 46 பேரும் , கோயம்புத்தூரில் 41 பேரும், கன்னியாகுமரியில் 22 பேரும், சேலத்தில் 23 பேரும் கொரோனா தொற்றினால் பாதிப்பு அடைந்துள்ளனர்.







