நாகை அருகே பெய்த கனமழையால் 600 ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்ததால், விவசாயிகள் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 10 நாட்களாக நாகை மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்கு பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான சம்பா பயிர்கள் மழையில் சாய்ந்து நாசமாகி உள்ளன. திரும்பிய பக்கமெல்லாம் விவசாயிகளின் வேதனை குரல்கள் வயல் நடுவில் ஒலித்து வருகின்றன. இதனிடையே நாகை மாவட்டம் அத்திபுலியூர்,
நீலப்பாடி, ராதாநல்லூர் ஒதியத்தூர் கூத்தூர் குருமணாங்குடி செருநல்லூர் ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 600 ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

இதனால் பாதிப்புக்கு ஆளாகி உள்ள அத்திப்புலியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் வயல் நடுவில் இறங்கி கதிர் முளைத்த நெற்கதிர்களை கண்டு ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அண்டா, குண்டா அடகு வைத்து உழவு செய்த விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், மழையில் மிதக்கும் நெற்பயிர்களை அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை என்றும் ஒப்பாரி வைத்து சோகப் பாடல் பாடி தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.







