தாராபுரம் பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச் சோளப் பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள சின்னப்புத்தூர், பொட்டிக்காம்பாளையம், நாரணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில் மக்காச் சோளம் பயிரிடப்பட்டு இருந்தது. ஏக்கர் ஒன்றுக்கு ரூ 25,000 வரை செலவிடப்பட்டு 90 நாட்களில் மக்காச்சோள பயிர்கள் நன்கு விளைந்திருந்தன. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாய நிலங்களில் மழைநீர் வெள்ளம் போல் புகுந்து வயல்களில் தேங்கி நின்றுள்ளது.
இதனால் கதிர் முற்றி காய்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச் சோளப் பயிர்களும், கதிர் அடிப்பதற்காக குவியலிட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்களும் சேதமடைந்தன. தற்போது 100 கிலோ எடைகொண்ட ஒரு குவிண்டால் மூட்டை மக்காச்சோளம் ரூ.1400 முதல் ரூ 1500 வரை விற்பனையாகி வரும் நிலையில் அடுத்தடுத்து பெய்த தொடர் மழையால் இப்பகுதிகளில் மட்டும் 600 டன் மக்காச்சோளம் நீரில் மூழ்கி பயனற்றுப் போனது.
இதனால் இப்பகுதியில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்த விவசாயிகளுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறியுள்ளனர்.







