பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் இன்று கள ஆய்வு மேற்கொண்டது. பயிர் சேதம் தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன என்பதை நேரடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில் கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களிலும் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களின் நிலை, விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகள் என்ன? என்பது குறித்து நேரடியாக களத்தில் இருந்து நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்கள் விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.
கடலூர் மாவட்ட வசாயிகள் தரப்பில் கூரியதாவது: பருவம் தவறி பெய்த மழையால் 2,662 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. மேலும் காட்டுமன்னார்கோவில் ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை.
இதனால் நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்குவதோடு, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தொகையும் இன்னும் வழங்கவில்லை. அவற்றையும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.
நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாண்டி செம்பியமங்கலம் பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது விவசாயிகள் தெரிவித்ததாவது: 120 நாட்கள் கழித்து அறுவடை நேரத்தில் மழையால் நெற்பயிற்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.முதலமைச்சர் அறிவித்த இழப்பீடும் மிகக் குறைவாக உள்ளது. இதனால் இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பயிர்க்காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு தொகை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்க்காப்பீடு நிறுவனம் மழைக்கு முன்பாகவே ஆய்வு செய்துவிட்டது. மழைக்கு பின்பு தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் மீண்டும் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதனையடுத்து நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலியாக திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர்சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பிறகு நியூஸ் தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில், விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகக் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். டெல்டா விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.முழுமையான மானியத்தில் விவசாயிகளுக்கு பயிர் விதைகள் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் வைத்த கோரிக்கைகளை அவரும் முன் வைத்தார்.
- பி. ஜேம்ஸ் லிசா










