தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தவெக அரசை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தவெக அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான விமர்சனங்கள்!
அந்தப் பதிவில், சட்டம் – ஒழுங்கு நிலை, ஒரே நாளில் நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ள 17 கொலைகள், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவி தொடர்பான விமர்சனம் மற்றும் பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்எல்ஏ மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளையும் விமர்சித்துள்ள மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
“சட்டம் – ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்!
ஒரே நாளில் 17 கொலைகள்!
குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு!
பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு!
இந்த தவெக ஆட்சியில்,
குற்றவாளிகளுக்குப் பயமில்லை!
காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை!
த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை!
மொத்தத்தில்,
Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலினின் இந்தப் பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.




