தேர்தலன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை!

தேர்தலன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசிற்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ல் ஒரே…

தேர்தலன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசிற்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ல் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 135பி-ன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கடைகளில் பணிபுரியும் நிரந்தர, தற்காலிக, ஒப்பந்த ஊழியர்கள் என அனைவருக்கும் பொது விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் நல ஆணையர் வெளியிட்டிருந்த உத்தரவில் தெரிவித்திருந்தார். அதன்படி பொது விடுமுறையை மாநில அரசு அறிவித்தது.

இந்நிலையில், நிறுவனங்கள் சில ஊதியத்துடன் விடுப்பு வழங்குவதில்லையென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு,
தேர்தலன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்கும் உரிமை குறித்து தனியார் நிறுவன ஊழியர்களிடம் விளம்பரப்படுத்தும் வகையில் அறிவிக்கை வெளியிட தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவும் பிறப்பித்துள்ளனர்.

ஏப்ரல் 6ம் தேதியன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.