’கல்வி என்ற ஆயுதத்தை கையில் எடுங்கள்’ – மாணவர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை

நெல்சன் மண்டேலா கூறியதைப் போன்று உலகிலேயே மிகப்பெரிய ஆயுதம் கல்வி என்றும், இந்த ஆயுதத்தை கையில் எடுங்கள் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு அரசு மேனிலைப்பள்ளியின் 177வது…

நெல்சன் மண்டேலா கூறியதைப் போன்று உலகிலேயே மிகப்பெரிய ஆயுதம் கல்வி என்றும், இந்த ஆயுதத்தை கையில் எடுங்கள் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு அரசு மேனிலைப்பள்ளியின் 177வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “உலகில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. அரசு பள்ளியில் பயின்றாலே போதும். இங்கு படித்தவர்கள் பெரிய பொறுப்புகளில் உள்ளனர். மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் தொழிலதிபராக உள்ளனர்.

நாம் நம்மை ஆளாக்கிய தாய்க்கு நன்றி சொல்ல வேண்டும். அதேபோன்று நமக்கு உதவிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். நெல்சன் மண்டேலா கூறியதை போன்று உலகிலேயே மிகப்பெரிய ஆயுதம் கல்வி. அந்த கல்வி என்ற ஆயுதத்தை கையில் எடுங்கள். தமிழையும் ஆங்கிலத்தையும் படியுங்கள். அதேபோன்று அறிவியலையும் புவியியலையும் படியுங்கள்” என்று பேசினார்.

தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய டிஜிபி, “சென்னையில் இருந்து பலநூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த அரசுப் பள்ளியில் தான் நான் பயின்றேன். முதல்வர் தற்போது ’நமது பள்ளி’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி முன்னாள் மாணவ மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளிக்கு உதவ முன்வர வேண்டும். இந்த பள்ளியில் நான் படிக்கும் பொழுது 1,500 மாணவர்கள் இருந்தனர். தற்பொழுது 500 மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.

வருங்காலங்களில் இந்த பள்ளியில் மீண்டும் 1,500 மாணவர்கள் படிப்பதற்கான முயற்சியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். திறமையான மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் உள்ளனர். இங்கு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நல்ல பரிசுகளை வழங்கி உள்ளோம். வறுமையில் வசதியின்றி தவிக்கும் மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பதற்கான உதவிகளை நாங்கள் செய்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.