மாணவர்களுக்கு விளையாட இடம் வேண்டி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து முறையிட நான் தயாராக இருக்கிறேன் என கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
22 யார்ட்ஸ் மற்றும் ஜென் நெக்ஸ்ட் நிறுவனங்கள் கூட்டாக நடத்தும் கோடைக் கால
சிறப்பு கிரிக்கெட் பயிற்சி முகாம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், ‘வெளிநாடுகளில் ஒரு குழந்தை கிரிக்கெட் விளையாட நினைத்தால் அந்த வசதி இந்தியாவில் கிடைக்கிறதா என்றால் அது இல்லை. நகர்ப்புறத்திலிருந்து கிரிக்கெட் விளையாட வருபவர்கள் குறைந்து உள்ளது கிராமப்புறத்திலிருந்து அதிக அளவில் விளையாட வருகிறார்கள்.
தற்போது அகாடமியில் மூலம் அனைத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. விளையாடுவதற்கு தற்போது இடம் கிடைப்பது கடினமாக உள்ளது. கிராமப்புறத்தில்
இருந்து குழந்தைகளை வர அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டு வருகின்றன.
நாங்கள் முன்னெடுப்பது மட்டுமின்றி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இளைஞர்களும் மாணவர்களும் கிரிக்கெட் விளையாடுவதற்குச் சென்னையில் போதிய மைதான வசதி இல்லை. இது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சரிடம் முறையிடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் முறையிடுவேன் என பேசினார்.
அதன் பின், ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டதைக் குறித்த கேள்விக்கு பதிலளித்த அஸ்வின் ரவிச்சந்திரன், ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டு இருந்தால் அதை விளையாடாதீர்கள். நான் அதை விளையாடவில்லை என செய்தியாளர்களின் கேள்விக்கு ஆவேசமாகப் பதில் அளித்தார்.
தொடர்ந்து கிரிக்கெட்டில் சூதாட்டம் இருக்கின்றது என்பது குறித்த கேள்விக்கு, கிரிக்கெட் ஆன்லைன் விளையாட்டுகளில் சூதாட்டம் இல்லை, அது game of skill என்று தான் கூறுகின்றனர் எனவும் அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.







