தடுப்பூசி விவகாரம் தொடர்பாக பிரதமரை முதலமைச்சர் சந்திக்க வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக சில நாட்களாக தடுப்பூசி போடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.
இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு ஆமை வேகத்தில் சென்றுகொண்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டை விட பின்தங்கிய பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 24 சதவிகிதத்துக்கு அதிகமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் 19 சதவிகிதத்தினர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு கடைசி மாநிலமாக உள்ளது என்றும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய அரசிடம் தடுப்பூசி பெறுவதில் தமிழ்நாட்டில் சுணக்கம் இருப்பதாகக் குறிப்பிட்ட ஓ.பன்னீர்செல்வம், “முதலமைச்சர் இதில் தனி கவனம் செலுத்தி, தேவைப்பட்டால் பிரதமரை நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் தடுப்பூசி புள்ளி விவரங்களை எடுத்துரைத்து இந்த ஆண்டு இறுதிக்கும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.







