தமிழகத்தில் ஒருவர் கூட பசியால் வாடவில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டுமென திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் காய்கறிபோல மளிகை பொருட்களை வாகனங்கள் மூலம் விற்பனை செய்துகொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது. அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதம் 13 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஒருவார கால ஊரடங்கினால் நோய்த்தொற்று எண்ணிக்கை ஓரளவு குறைந்து வருவதைக் காண்கிறோம். இது மேலும் குறைந்து, நோய்த் தொற்று வரைபடம் தட்டையான நிலையை எட்டிட வேண்டும் என்பதற்காகத்தான் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்,
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஆய்வுப் பணிக்காக கோவை செல்லவுள்ளதாகவும், அரசு முறைப் பயணம் என்பதால், திமுக நிர்வாகிகள் யாரும் தன்னை நேரில் வரவேற்பதற்கும் சந்திப்பதற்கும் ஆர்வம் காட்ட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், “என் மீது தாங்கள் காட்டுகிற அன்பினை வரவேற்பு பதாகைகள் வாயிலாக வெளிப்படுத்த வேண்டாம். மேலும் ஒருவார காலம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் தழுவிய அளவிலும் குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் உணவு வழங்கும் பணியை மேற்கொண்டு, தமிழ்நாட்டில் ஒருவர்கூட பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்குவதையே எனக்கு அளிக்கப்படும் சிறப்பான வரவேற்பாகக் கருதுகிறேன்” என திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.







