ஐரோப்பாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய பிராந்தியத்தின் தலைவர் ஹான்ஸ் க்ளூஜ் கூறியதாவது;
“கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அலை ஏற்படும். கடந்த வாரம் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் காரணமாக மக்கள் பயணம் செய்வதும், கூட்டம் கூடுவதும் அதிகரித்திருக்கிறது. சமூக இடைவெளியை பின்பற்றுவதும் குறைந்திருக்கிறது. இது டெல்டா வகை கொரோனா தொற்றாக அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. இது ஐரோப்பிய பிராந்தியத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். டெல்டா வகை தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. முற்றிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனில் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக் கொள்ள வேண்டும்.
ஐரோப்பாவில் சராசரியாக 24 சதவீதம் பேர்தான் தடுப்பூசி போட்டுள்ளனர். மூத்த குடிமக்களில் பாதிப்பேரும், 40 சதவீத சுகாதார களப்பணியாளர்களும் தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர். இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. 18 வயதுக்கு மேற்பட்டோரில் 80 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற பரிந்துரைக்கு இது எதிரானது.” இவ்வாறு ஐரோப்பிய பிராந்தியத்தின் தலைவர் ஹான்ஸ் க்ளூஜ் கூறினார்.







