தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக குற்றால அருவில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர்வெள்ளப்பெருக்கில் சுற்றுலா சென்றிருந்த 5 பேர் சிக்கியுள்ளனர். இதில் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், இருவரை தேடும் பணியானது தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் இணைந்து மீட்டுப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது, குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அருவியல் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் 5 பேர் எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ள நிலையில், மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர், மற்றொருவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.
தற்போது, இந்த சம்பவம் குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாத வண்ணம் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு பாதுகாப்பை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதேபோல் குற்றாலம் அருவிகளில் இதற்கு முன்பு இருந்த முதலுதவி சிகிச்சை மையம் தற்போது இல்லாத சூழலால் அவசர முதலுதவி கொடுக்க முடியவில்லை என கூறப்படுகிறது. அது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.