செஸ் ஒலிம்பியாட் போட்டியை மகாபலிபுரத்தில் நடத்த 8 காரணங்கள் என்ன?

ஒவ்வொரு விளையாட்டின் உச்சம் ஒலிம்பிக் என்றால் சதுரங்கத்தின் உச்சம் செஸ் ஒலிம்பியாட். 1924ம் ஆண்டு தொடங்கிய செஸ் ஒலிம்பியாட்டின் சுமார் 100 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக அந்த போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றிருக்கிறது…

ஒவ்வொரு விளையாட்டின் உச்சம் ஒலிம்பிக் என்றால் சதுரங்கத்தின் உச்சம் செஸ் ஒலிம்பியாட். 1924ம் ஆண்டு தொடங்கிய செஸ் ஒலிம்பியாட்டின் சுமார் 100 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக அந்த போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றிருக்கிறது இந்தியா.

187 நாடுகளை சேர்ந்த சுமார் 1750 வீரர்கள் இந்தப்போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதுவரை நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டுக்களிலேயே  அதிக வீரர்கள் பங்கேற்கும்போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிதான். இந்த போட்டியில் 6 அணிகளாக இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். மொத்தம் 30 இந்திய வீரர்கள் களம் காண்கின்றனர். இதன் மூலம் அதிக அளவு இந்திய வீரர்கள் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் என்கிற தனித்துவத்தையும் 44வது செஸ் ஒலிம்பியாட் பெற்றுள்ளது. கடந்த 1971ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியே அதிக நாடுகள் பங்கேற்பு அளவில் இந்தியா நடத்திய மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வாக இருந்தது. தற்போது அந்த பெருமையை  மாமமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் பெற்றுள்ளது. டெல்லி காமன்வெல்த் போட்டியில் 71 நாடுகள் பங்கேற்ற நிலையில், மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்டில் 187 நாடுகளிலிருந்து வீரர்கள் பங்கேற்க உள்ளனர்

இப்படி பல்வேறு சிறப்புகளை இந்தியாவிற்கு பெற்றுத் தந்து, சர்வதேச நாடுகளை இந்தியாவின் பக்கம் ஈர்க்கும்  44வது செஸ் ஒலிம்பியாட்டை நடத்தும் வாய்ப்பை தமிழ்நாடு பெற்றுள்ளது. தமிழ்நாடு விளையாட்டுத்துறை வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல்லாக விளங்கும் இந்த நிகழ்வு, சுற்றுலா தொடங்கி தொழில்துறை வரை பல்வேறு தளங்களில் சர்வதேச நாடுகளின் கவனம் தமிழ்நாட்டின் மீது விழுவதற்கான வாய்ப்பாகவும் கருதப்படுகிறது.  முதலில் ரஷ்யாவில்தான் 44வது செஸ் ஒலிம்பியாட் நடைபெறவிருந்தது. ஆனால் உக்ரைன் நாட்டில் அந்நாடு போர்தொடுத்ததால் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற சர்வதேச சதுரங்க சம்மேளனம் முடிவு செய்தது. இதனை உடனடியாக யூகித்து சுதாரித்துக்கொண்ட இந்திய சதுரங்க சம்மேளனம் போட்டியை இந்தியாவிற்கு கொண்டுவர முயற்சி எடுத்தது. செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்தும் வாய்ப்பு இந்தியாவிற்கு வந்தபோது பல்வேறு மாநிலங்களின் போட்டியை கடந்து தமிழ்நாடு அதனை பெற்றது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் இந்திய சதுரங்க சம்மேளன நிர்வாகிகள் மற்றும் சர்வதேச சதுரங்க நிர்வாகிகளுடன் மிக விரைவாக பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்து மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட்டை நடத்தும் வாய்ப்பை பெற்றனர். அத்தோடு நிற்காமல் செஸ் ஒலிம்பியாட்டை இளைஞர்களிடையே பிரபலப்படுத்தி அவர்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டது தமிழ்நாடு அரசு. இதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சிறப்பு பாடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே தோன்றி நடித்தார்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட சர்வதேச கவனம் ஈர்த்த மாநகரங்கள் பல இருக்க, 44வது செஸ் ஒலிம்பியாட்டை நடத்த மாமல்லபுரம்  என்கிற பேரூராட்சியை தேர்ந்தெடுத்தது ஏன்?

1) மாமல்லபுரத்தின் கலாச்சார மற்றும் கலைப் பொக்கிஷ பெருமைகள் சர்வதேச சதுரங்க சம்மேளனத்தை வெகுவாகக் கவர்ந்தது.

2) சர்வதேச பாரம்பரிய கலாச்சாரப் பொக்கிஷமாக 1984ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த நகரம் மகாபலிபுரம்.

3) சர்வதேச சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்துசெல்லும் இந்தியாவின் முக்கிய சுற்றுலாதலங்களில் ஒன்றாக மாமல்லபுரம் விளங்குகிறது.

4) சர்வதேச விளையாட்டு நிகழ்வை நடத்துவதற்கேற்ப போக்குவரத்து வசதிகளை எளிதில் கையாள முடியும். இந்த விளையாட்டோடு தொடர்புடைய வீரர்கள், அலுவலர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கனோர் போக்குவரத்து நெரிசல் இல்லாத பயணத்தை மேற்கொள்ள முடியும்.

5) மாநிலத்தின் தலைநகரமான சென்னையில் போட்டியை நடத்தினால், அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளி செல்வது உள்ளிட்ட பல விஷயங்கள் பாதிக்கப்படும் என்பதால் போட்டியை மாமல்லபுரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

6) வீரர், வீராங்கனைகள் தங்குவதற்கேற்ப சர்வதேச தரம் வாய்ந்த நட்சத்திர விடுதிகள் பல மாமல்லபுரத்தில் உள்ளன.

7) செஸ் ஒலிம்பியாட்டை மகாபலிபுரத்தில் நடத்துவதன் மூலம் தமிழ்நாட்டின் கலாச்சார, பாரம்பரிய பெருமைகள் சர்வதேச அளவில் மேலும் அதிக அளவில் சென்றடையும்.

8) மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள சென்னைக்கு அருகே உள்ளது, மகாபலிபுரத்திற்கு இன்னொரு சிறப்பு.

இவ்வாறு 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை மாமல்லபுரத்தில் நடத்துவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடந்தபோது மகாபலிபுரம் உலக நாடுகளின் கவனத்தை தமிழ்நாட்டை நோக்கி ஈர்த்தது. தற்போது 44வது செஸ் ஒலிம்பியாட்டை நடத்தி மீண்டும் தமிழ்நாட்டிற்கு சர்வதேச கவன ஈர்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளது மகாபலிபுரம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.