சென்னையில், கட்டப்பஞ்சாயத்து செய்ய வந்த நபரை, கட்டிப்போட்டு, அவரிடமிருந்த நகை, பணத்தை பறித்துச் சென்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
துரைப்பாக்கம், சக்திநகரில், நிர்மல்குமார் – விஷ்ணுபிரியா தம்பதி, ஹரி கிருஷ்ணன் என்பவரிடம் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால், அதனை முறையாக திருப்பித் தராமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, ஹரிகிருஷ்ணன், தனது நண்பரான விருகம்பாக்கத்தைச் சேர்ந்த குமாரை அணுகியுள்ளார். இதையடுத்து, நிர்மல்குமார் வீட்டிற்குச் சென்ற குமார், ஹரி கிருஷ்ணனுக்கு தர வேண்டிய பணத்திற்கு ஈடாக, கார், பைக் மற்றும் தாலி செயின், வைர மோதிரம் மற்றும் நான்கரை லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துச் சென்றதாக தெரிகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் அதிர்ச்சியடைந்த நிர்மல்குமார் தம்பதி, குமாரிடமிருந்து நகை, பணத்தை மீட்க முடிவு செய்துள்ளனர். எனவே, குமாரை தொடர்பு கொண்டு, தங்களுக்கு ஒரு நபர் பணம் தர வேண்டும் என்றும், எனவே, அதனை கட்டப்பஞ்சாயத்தை செய்து பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை நம்பி, குமார், நிர்மல் குமாரின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தம்பதி இருவரும் குமாரை கட்டிப்போட்டு அவரிடமிருந்த 50 ஆயிரம் பணம், தங்க செயின் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் நிர்மல்குமார் – விஷ்ணுபிரியா தம்பதியை கைது செய்தனர்.