முக்கியச் செய்திகள் இந்தியா

பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.1.10 லட்சம் கோடி கடனுதவி: நிதியமைச்சர் அறிவிப்பு

பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட துறைகளை மீட்டெடுக்க 8 வகையான பொருளாதார திட்டங்களை அவர்கள் அறிவித்தனர்.

இதில், ஏற்கனவே உள்ள 4 திட்டங்கள் கூடுதல் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் எனவும், சுகாதாரத் துறைக்கு தனியாக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  நலிவடைந்த துறைகளை மீட்க ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவித் திட்டத்தை அப்போது அவர் அறிவித்தார். 

சுகாதாரத்துறைக்கு மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். புதிய திட்டத்தின் மூலம், சிறு வியாபாரிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், சிறிய நிதி நிறுவனங்கள் மூலம், ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த சிறிய கடன் உதவி திட்டங்களின் மூலம் 25 லட்சம் பேர் பயனடைவர் எனவும் அவர் தெரிவித்தார். ஊரடங்கால், சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய நிதியமைச்சர், சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையிலான சலுகைகளையும் அறிவித்தார். 

விமான சேவை தொடங்கிய பின்னர் வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு வரும் முதல் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் விசா கட்டணம் செலுத்தத் தேவையில்லை என நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த ஆண்டு ஏழை மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ய 3 ஆயிரத்து 869 கோடி ரூபாய் நிதி செலவிடப்படும் என்றும் கூறினார். விவசாயிகளுக்கு உர மானியமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

நெகிழியால் பறவை இனங்கள் அழியும் அபாய நிலை?

Vandhana

ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான், டோக்கிய கடலில் மீண்டும் வைக்கப்பட்டது ஐந்து ஒலிம்பிக் வளையங்கள்!

Dhamotharan

தமிழக மீனவர்கள் விடுவிப்பு: புதுவை ஆளுநர் மாளிகை தகவல்!

Ezhilarasan