காவல்துறை வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு – இபிஎஸ் கண்டனம்!

காவல்துறை வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே குற்றவாளிகளை அழைத்துச் சென்ற வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ரவுடி வெள்ளை காளி உள்ளிட்ட 2 குற்றவாளிகளை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் விக்னேஷ்குமார், மாரிமுத்து பாண்டி ஆகிய 2 காவலர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், தாக்குதலில் இருந்து 4 காவலர்கள் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர். மேலும் குற்றவாளிகள் இருவரும் தற்போது போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

“தமிழக சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தன் முதுகை தானே தட்டிக்கொண்டு பெருமை பேசி வந்த நேரத்தில், திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெரம்பலூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறை வாகனம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மதுரையைச் சார்ந்த வெள்ளை காளி என்ற ரவுடியை காவலர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லும் போது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

இந்த வெடிகுண்டு வீச்சில் ரவுடியின் பாதுகாப்பிற்காக வந்த 4 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு காவல்துறையை பார்த்தோ, இந்த அரசை பார்த்தோ அச்சமில்லை என்ற நிலைதான் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைக்கும் நிலையில், ஆட்சி சக்கரத்தை ஏனோ தானோ என்று சுழற்றி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார் என்று தெரியவில்லை. காவல்துறையை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்காத முதலமைச்சரை வன்மையாக கண்டிக்கிறேன்”

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.