கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கிவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் படித்து வந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடியிலிருந்து குதித்து உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாகப் பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
https://twitter.com/news7tamil/status/1549348726400987136
இந்நிலையில், ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற இளைஞர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து கள நிலவரம் குறித்து ஆராய அமைச்சர்கள் எ வ வேலு, அன்பில் மகேஸ், கணேசன், உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோரை அங்கு அனுப்பிவைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
https://twitter.com/news7tamil/status/1549347091562250240
அவர்கள் நேரில் ஆய்வு செய்த பின்னர், இன்று முதலமைச்சர் ஸ்டாலினுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர். தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சரின் தனிச்செயலாளர் உதயச்சந்திரன், உளவுத்துறை ஏடிஜிபி தேவாசீர்வாதம், கல்வித் துறை உயர் அலுவலர்களும் பங்கேற்றனர். வன்முறைக்கான காரணம், விசாரணை, மாணவர் நலன், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் கேட்டறிந்து அறிவுறுத்தல்களை வழங்கினார்.
https://twitter.com/news7tamil/status/1549348225332613121
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த செல்வகுமார் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டு, புதிய மாவட்ட கண்காணிப்பாளராகப் பகலவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியராக இருந்த ஶ்ரீதருக்கு பதிலாக, மாவட்ட ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜடாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.







