மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே பகுதியில் ரூ.8 கோடி மதிப்புள்ள ரூ.2000 கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியில் வாக்லே இடத்தில் உள்ள கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் பகுதியில் காவல்துறை இன்று திடீர் சோதனை நடத்தினர். இதில் ரூ.8 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பல்கார் பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
கடந்த 2019ம் ஆண்டு முதல் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது. 2000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.
https://twitter.com/ANI/status/1591335501025669120
கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கும் எண்ணிக்கையை ரிசர்வ் வங்கி மெல்ல மெல்ல குறைத்து வந்தது. 2019ம் ஆண்டு முதல் முற்றிலுமாக நிறுத்திவிட்டது. 2000 ரூபாய் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்த நிலையில், அதனை அச்சடிப்பை ரிசர்வ் வங்கி நிறுத்தியதாக கூறப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், ரிசர்வ் வங்கி, 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து மெல்ல குறைத்தும் வருகிறது. 2020ம் ஆண்டில் 274 கோடி ரூபாய் 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. தற்போது இது 214 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







