இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,439 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பாதிப்பை விட 23% கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது 93,733 பேர் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 555 நாட்களில் பதிவான எண்ணிக்கையை விட குறைவாகும்.
https://twitter.com/MoHFW_INDIA/status/1468429004981956610
மொத்த பாதிப்பில், தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1% ஆக உள்ளது. கடந்த மார்ச் மாதத்தை பொறுத்த அளவில், இந்த எண்ணிக்கை 0.27%ஆகும்.
அதேபோல 195 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,73,952 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த இதுவரை 129.54 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 9,525 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 3,40,89,137 பேர் குணமடைந்துள்ளனர்.
இதற்கிடையில் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று இந்தியாவிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தொற்றால் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 38 நாடுகள் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.








