தமிழகத்திற்கு இன்று வரவேண்டிய 1.70 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பவில்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா தடுப்பூசிக்கான தட்டுப்பாடு நிலவி வருகிறது. நேற்றைய தினம் தமிழக அரசு கையிருப்பில் சுமார் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே இருந்தது. இந்த தடுப்பூசிகளை கொண்டு அடுத்த 2 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடமுடியும்.
இந்நிலையில் மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு இன்று வரவேண்டிய 1.70 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வரவில்லை என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக வரும் நாட்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படும் சூழல் உள்ளதாக நேற்றைய தினம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அனுப்ப இருந்த 1.70 லட்சம் தடுப்பூசிகளை நம்பி தமிழகத்தில் தடுப்பூசி முகாம்களுக்கு வரும் நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் தற்போது 18-வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளதால் தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளப் பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர்.
ஆனால் மத்திய அரசு இன்று தடுப்பூசி அனுப்பாத காரணத்தால் வரும் நாட்களில் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மத்திய சுகாதாரத் துறை அனுப்பவேண்டிய 1.70 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இன்னும் ஒரிரு நாட்கள் கழித்து அனுப்பிவைப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
Corona Vaccine, Tamilnadu Health Department, Ministry Of Health,







