மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை தடையில்லாமல் வழங்குமா?

மத்திய அரசின் சுகாதாரத் துறை சார்பில் தமிழகத்துக்கு இந்த மாத இறுதிக்குள் வழங்கவேண்டிய 37 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நிச்சயம் தடையில்லாமல் கிடைக்கும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது குறித்து…

மத்திய அரசின் சுகாதாரத் துறை சார்பில் தமிழகத்துக்கு இந்த மாத இறுதிக்குள் வழங்கவேண்டிய 37 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நிச்சயம் தடையில்லாமல் கிடைக்கும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசியதாவது, “மத்திய சுகாதாரத் துறை சார்பில் நேற்று புதிதாக வந்த 5 லட்சம் தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை எண்ணிக்கை மற்றும் கொரோனா தொற்றின் அளவு அடிப்படையில் மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் ஒரேநாளில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையை காட்டிலும், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.

தமிழக சுகாதாரத் துறையினரிடம் தற்போது ஆறரை லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இந்த தடுப்பூசிகளைக் அடுத்த நான்கு நாட்களுக்கு பயன்படுத்தமுடியும்.

மத்திய அரசின் சுகாதாரத் துறை சார்பில் தமிழகத்துக்கு இந்த மாத தொகுப்பாக 42 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படவேண்டும். அதில் முதற்கட்டமாக 5 லட்சம் தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டது. மீதமுள்ள 37 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் தடையில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்துக்கு தடையில்லாமல் கிடைக்க முதல்வர் ஸ்டாலின், திமுக எம்பி டிஆர் பாலு, சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆகியோர் மத்திய அரசு, அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம்.

அதேபோல் செங்கல்பட்டில் உள்ள HLL தடுப்பூசி மையத்தை தமிழக அரசே ஏற்று நடத்த மத்திய அரசின் இறுதி முடிவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.